Coldplay இசை நிகழ்ச்சி: அசம்பாவிதங்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டல்

கோலாலம்பூர்: புக்கிட் ஜாலில் மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கும் Coldplay: Music Of The Spheres World Tour concert இசை நிகழ்ச்சியின் போது அல்லது அதற்குப் பிறகு ஆத்திரமூட்டும் செயல்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. 75,000 பேர் பங்கேற்கும் இந்த இசை நிகழ்ச்சியில் யாரேனும் இடையூறு விளைவிக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுதீன் தெரிவித்தார்.

பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, போலீசார்  சோதனைகளை மேற்கொள்வார்கள் மற்றும் நுழைவாயில்களில் பைகள் மற்றும் பொருட்களை ஆய்வு செய்வார்கள்.அரங்கம் மாலை 6 மணிக்கு திறக்கப்படும். பார்வையாளர்கள் பட்டாசுகள் /  ஹெல்மெட்கள், லேசர்கள், கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள், மதுபானங்கள், குடைகள் அல்லது வாக்கிங் ஸ்டிக்ஸ் / பிரம்பு, பவர்பேங்க்கள் மற்றும் பாட்டில் தண்ணீர் ஆகியவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் லைட்டர்கள், தீப்பெட்டிகள், சிகரெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகள், ஒலிபெருக்கிகள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். நுழைவாயிலில் அல்லது மைதான வளாகத்திற்குள் சோதனையின் போது பறிமுதல் செய்யப்படும் தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு போலீசார் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று ஜாம் ஹலீம் கூறினார்.

கச்சேரிக்கு வருபவர்கள் பொதுப் போக்குவரத்தில் செல்லவும், சாலையோரம், குறிப்பாக மைதானத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். பொதுமக்கள் பணியில் இருக்கும் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்குமாறும் மைதான பகுதியில் வாகன சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here