இஸ்ரேல் – காசா இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, இருதரப்பினர் இடையே மத்தியஸ்தம் மேற்கொண்டு வரும் கத்தார் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – காசா இடையிலான போரின் 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் நிறைவு பெறுவதை அடுத்து, போர் நிறுத்தத்தை மேலும் சில தினங்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக கத்தார், எகிப்து நாடுகள் கூடி பேச்சுவார்த்தை நடத்தின. மற்றுமொரு 4 தினங்களுக்கான போர் நிறுத்தத்துக்கு இணங்குமாறு, போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் – காசா தரப்பினரிடம் வலியுறுத்தப்பட்டது.
ஹமாஸ் இதற்கு உடன்பட்டபோதும், இஸ்ரேல் அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு தயாராவதிலேயே குறியாக இருந்தது. எனினும், ஹமாஸ் வசமிருக்கும் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதை பொருத்து, போர் நிறுத்த நீட்டிப்புக்கு இஸ்ரேல் இணங்கி வந்தது. இதன்படி தற்போதைய தற்காலிக போர் நிறுத்தமான மேலும் 2 தினங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, கத்தார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
போரில் கடுமையான இழப்பை சந்தித்துள்ள ஹமாஸ் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும், மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தால் அதற்கு ஈடுகொடுக்கவும் அதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், ஹமாஸ் ஆயுதக் குழுவினரை நிர்மூலம் செய்யும்வரை தங்களது பாதுகாப்புப் படையின் தாக்குதல்கள் நிற்காது என்பதில் இஸ்ரேல் முடிவாக இருந்தது.
இறுதியில் ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகள் என்னும் துருப்புச்சீட்டுக்கு இஸ்ரேல் இறங்கி வந்தது. வழக்கம்போல 3க்கு 1 என்ற கணக்கில் இஸ்ரேல் வசமிருக்கும் சிறைக்கைதிகளும், ஹமாஸ் வசமிருக்கும் பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட இருக்கின்றனர். இதில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைக்கு எதிராக கல்லெறிந்ததற்காக கைதான சிறுவர்கள் மற்றும் பெண்களை விடுதலையாவோர் கணக்கில் காட்ட முன்வருகிறது. ஆனால், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் தங்களது அமைப்பின் முக்கிய புள்ளிகளை விடுவிக்குமாறு கோருகிறது. இதற்கு இஸ்ரேல் இணங்குவதாக இல்லை.
இந்த சூழலில், கத்தார் அறிவித்திருக்கும் 2 நாள் போர் நிறுத்த அறிவிப்பு காசா மக்கள் மத்தியில் ஆசுவாசம் தந்திருக்கிறது. “தற்போதைய மத்தியஸ்தத்தின் ஒரு பகுதியாக, காசா பகுதியில் மேலும் இரண்டு நாட்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கத்தார் அரசு அறிவிக்கிறது” என்று கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி, ட்விட்டர் பதிவு நவ.27 இரவில் வாயிலாக அறிவித்திருக்கிறார்.