திருமதி மலேசிய அழகி 2023 வனிஷா ரமேஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெறும் மிஸஸ் வேர்ல்ட் 2023 போட்டியில் சிறந்த தேசிய ஆடை பட்டத்துக்கான போட்டியில் பங்கேற்க, மிகப்பெரிய வாவ் (kite) உடையை அணிந்துள்ளார். 3.8மீ உயரமும் 4.8மீ அகலமும் கொண்ட இந்த ஆடை – Saran Anak Lagong வடிவமைத்துள்ளது – இன்று (டிசம்பர் 30) “மிகப்பெரிய வாவ் உடை” என மலேசிய சாதனை புக்கத்தில் இடம்பிடித்துள்ளது.
27 வயதான வனிஷா, உள்ளூர் கைவினைத்திறனின் தனித்துவத்தையும் நுணுக்கத்தையும் வெளிப்படுத்தி அடுத்த மாதம் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்பதன் மூலம் நாட்டின் பெயரை உயர்த்துவேன் என்று நம்புவதாக கூறினார். இந்த உடையுடன் அனைத்துலக அளவில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில் நான் தனித்துவமான மற்றும் முன்னோடியில்லாத ஒன்றைக் காட்ட விரும்புகிறேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை தயார்படுத்திக் கொண்டு சுமார் 10 கிலோ எடையுள்ள ஆடை அணிவதை சவாலாக ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார். மார்ச் மாதம் முதல் கேட்வாக் பயிற்சியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன், என் உடல் நலத்தையும் கவனித்து வருகிறேன், அதே சமயம் எனது தொழிலையும் சமூகப் பணிகளையும் கவனித்து வருகிறேன். போட்டியில் என்னால் சிறந்ததைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.