டோக்கியோ: டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் சிறிய கடலோர காவல்படை விமானம் மோதியதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து நேற்று எரிந்தது. அப்போது ஜப்பான் மக்கள் நடந்து கொண்ட விதம் கவனம் பெற்றுள்ளது. விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் அந்த பயணிகள் விமானம் மோதிய கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் பலியாகிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதில் கடலோர காவல்படை விமானத்தின் கேப்டன் காயம் அடைந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாங்கள் தரையிறங்கிய தருணத்தில் எங்கள் விமானத்தை எதோ தாக்கியது. விமானம் வேகமாக குலுங்கியது என்று ஒரு பயணி செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நான் ஜன்னலுக்கு வெளியே தீப்பொறிகளைக் கண்டேன் மற்றும் கேபினில் எரிவாயு மற்றும் புகை நிரம்பியது. எங்களை வேகமாக வெளியேற சொன்னார்கள், என்று அவர் கூறி உள்ளார். எப்படி தப்பித்தனர்?: பயணிகள் வெளியேற்றும் ஸ்லைடு வழியாக தப்பி, தார் சாலையின் குறுக்கே பாதுகாப்புக்காக ஓடி தப்பித்தனர், இந்த காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். தரையிறங்குவதற்கு முன்பு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அதன்பின் விமான ஓடு பாதையில் இன்னொரு விமானம் வந்தது எப்படி என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. . விமானக் கட்டுப்பாட்டாளர்களுடனான நடந்த பரிமாற்றங்கள் விசாரணையில் உள்ளன.
மோதலுக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு விமானங்களும் எப்படி, எந்த நேரத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டன என்பதை கண்டறிய விசாரணை நடந்து வருவதாக கடலோர காவல்படை கூறியது. மக்கள் நடந்து கொண்ட விதம்: இந்த விமானம் தீ பிடித்த போது ஜப்பான் மக்கள் நடந்து கொண்ட விதம் கவனம் பெற்றுள்ளது. அங்கே ஜப்பான் மக்கள் ஒரு நொடி கூட ஆ.. ஊ என்றெல்லாம் கத்தவில்லை. பதற்றம் அடையவில்லை. விமான பணிப்பெண்கள் சொன்னதை அப்படியே கேட்டு அமைதியாக நடந்து கொண்டனர்.
கையில் பொருட்களை எடுக்க வேண்டாம் என்று கூறியதை கேட்டுக்கொண்டு.. எந்த பொருட்களையும் எடுக்காமல் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். முண்டியடித்து ஓடாமல் அமைதியாக நடந்து சென்றனர். அதோடு வெளியே சென்ற பின்பும் கூட.. மற்ற பயணிகள் வரிசையாக இறங்கி வர அமைதியாக வழிவிட்டனர். அவர்கள் இறங்கி வர உதவிகளையும் செய்தனர். இவ்வளவு இக்கட்டான நேரத்திலும் கூட ஜப்பான் மக்கள் பண்போடு நடந்து கொண்ட விதம் மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.