விமானத்தில் இருந்து விழுந்த “ஐபோன்” 16,000 அடி உயரம்.. ஒன்னும் ஆகலையே.. வியந்து போன நெட்டிசன்ஸ்

வாஷிங்டன்: 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து அதன் கதவு பெயர்ந்து விழும் வீடியோ இணையத்தில் அதிகம் பரவிய நிலையில், அந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் ஒன்று உடையாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது நெட்டிசன்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென அதன் கதவு அப்படியே பெயர்த்துக் கொண்டு பறந்துள்ளது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் ஏர்போர்ட்டில் விமானம் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. நடுவானில் அந்த கதவு பறந்த நிலையில், அருகே இருந்த இருக்கை ஒன்றும் பறந்தது. இருப்பினும், நல்வாய்ப்பாக அந்த இருக்கையில் யாரும் இல்லை என்பதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. விமானத்தின் ஜன்னல் பறந்து விழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

உடையாமல் இருந்த ஐபோன்: அதில் விமானத்தின் பின்புற மிட் கேபின் கதவு சுவருடன் அப்படியே பெயர்ந்துள்ளது தெரிகிறது. உலக அளவில் விமான பயணிகள் மத்தியில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் ஒன்று உடையாமல் அப்படியே மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சேனதன் பேட்ஸ் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், பேரன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஐபோன் ஒன்றை கண்டெடுத்தேன். இந்த ஐபோன் பிளைட் மூட் ஆக்டிவேஷனில் இருந்தது. 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் அப்படியே உள்ளது. இது குறித்து விமான விபத்துக்கள் தொடர்பாக விசாரிக்கும் என்.டி.எஸ்.பிக்கு தெரிவித்த போது, கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது போன் என்று கூறினார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து: இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் கீழே விழுந்தது எந்த மாடல் ஐபோன் என்று விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், நான் எனது பாக்கெட்டில் இருந்து கீழே போட்டால் கூட போன் உடைந்து விடுகிறது. ஆனால், இது 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் உடையவில்லை.. நல்லதுதான் என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இதுதான் ஏர் டிராப் என பதிவிட்டு இருக்கிறார். இன்னொரு நெட்டிசனோ ஒருபடி மேலே போய், ஆப்பிள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் டீம் தற்போது இதை வைத்து விளம்பரம் எப்படி செய்யலாம் என்று தீவிர ஆலோசனையில் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here