இந்தியா – இலங்கை இடையே தனுஷ்கோடியிலிருந்து பாலம்; ஆய்வு

தனுஷ்கோடியில் இருந்து இந்தியா – இலங்கை இடையே கடல் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனுஷ்கோடி அரிச்சல் முனை
தனுஷ்கோடி அரிச்சல் முனை
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், இன்று பிரான பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வேத விற்பன்னர்கள் கலந்துகொண்டனர். இதனால், உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இன்றைய பிரான பிரதிஷ்டைக்கு முன்னதாக பிரதமர் மோடி, குருவாயூர், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல முக்கிய ஸ்தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதேபோல், தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனைக்கு சென்று வழிபாடு நடத்தினார். அங்கிருந்தே ராமர் பாலம் அமைத்து, இலங்கைக்கு சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ராமர் பாலத்தைத் தேசிய பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டும் என பலரும் இந்த வேளையில் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 23 கி.மீ. கடல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை இரு நாடுகளிடையே பல ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த போது, இந்த பாலம் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல் தெரிவித்திருந்தார். தற்போது, பாலம் கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை மற்றும் அரசுத் துறைகள் இணைந்து ஆலோசனை நடத்தியதாகவும், அதில் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here