இணையப் பயன்பாட்டை சிறுவர்களுக்கு பாதுகாப்பானதாக்க சிறப்புக்குழு – ஃபாமி

புத்ராஜெயா:

மலேசியாவில் இணையக் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு சிறப்புக்குழு ஒன்றை அரசாங்கம் அமைக்கவுள்ளது.

இது தொடர்பான அந்தக் குழு, அரசியல் கட்சிகளிடமும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் சட்டங்களை மதிப்பீடு செய்யும், அத்தோடு இணையக் குற்றங்களில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க விரிவான கட்டமைப்பை உருவாக்க மலேசியாவுக்குத் தேவையான சட்டங்கள் பற்றி ஆய்வு செய்ய பிரதமர் அலுவலகத்தில் மின்னிலக்க அமைச்சு, தொடர்புத்துறை அமைச்சு, சட்ட விவகாரப் பிரிவு ஆகியவை அந்தச் சிறப்புக் குழுவில் இடம்பெறும் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி பட்ஸில் தெரிவித்தார்.

பாதுகாப்புப் பிரச்சினைகளை இணைய குற்ற நடவடிக்கை தொடர்பான விவகாரங்களையும் மதிப்பிட தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவையில் விவாதித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.

“உதாரணமாக, போதைப்பொருள் விற்பனை அல்லது இணைய சூதாட்டம் அல்லது சர்ச்சைக்குரிய காணொளிகளைப் பரப்புவது போன்ற நடவடிக்கைகள் குறித்து எம்சிஎம்சி பெற்ற பின்னூட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இது அமைந்துள்ளது,” என்று கூறிய அவர், பணத்துக்காக டெலிகிராம் போன்ற செயலிகளில் ஆபாசக் காணொளிகளைப் பரப்பும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதன் தொடர்பில் அமைச்சர் கருத்துரைத்தார்.

மலேசியா பின்பற்றுவதற்கு ஏற்றதாக இருக்கக்கூடிய மற்ற நாடுகளின் சட்டங்களையும் குழு மறுஆய்வு செய்யும் என்றும், இணையத்தையும் சமூக ஊடகங்களையும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்கு அந்தச் சிறப்புக் குழு செயல்படும் அவர் சொன்னார்.

மலேசிய மக்கள்தொகையில் 27.4 விழுக்காட்டினர் பிள்ளைகள் என்று சென்ற ஆண்டு புள்ளி விவரத் துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here