கோலாலம்பூர்:
ஜோகூரில் வெள்ள நிலமை மேம்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இயங்கிவந்த அனைத்து வெள்ள நிவாரண மையங்களும் மூடப்பட்டுள்ளன, அதே சமயம் திரெங்கானு மற்றும் பகாங்கில், இன்று (ஜன30) காலை 6 மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் உள்ள மூன்று நிவாரண மையங்களில் இன்னும் 495 பேர் தங்கியுள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (நட்மா) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, திரெங்கானுவில் 157 குடும்பங்களைச் சேர்ந்த 473 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் டுங்கூனில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் உள்ளனர், அத்தோடு பகாங்கில் 22 பேர் உள்ளனர். ஐந்து குடும்பங்கள் ரொம்பினில் உள்ள நிவாரண மையத்தில் தங்கி உள்ளனர்.
வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் டெலிமெட்ரி நிலையத்தில் சோதனைகள் ஜோகூர், கெடா, பகாங், பெர்லிஸ், சபா மற்றும் திரெங்கானுவில் உள்ள பல ஆறுகள் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
வெள்ளம், சேதமடைந்த பாலங்கள் மற்றும் இடிந்து விழுந்த சாலைகள் மற்றும் நிலச் சரிவுகள் காரணமாக 18 சாலைகள் மூடப்பட்டுள்ளன என்றும் நட்மா தெரிவித்துள்ளது.