மோடியிடம் மன்னிப்பு கேளுங்க முதல்ல.. சொந்த நாட்டிலேயே எதிர்ப்பு! சிக்கலில் மாலத்தீவு அதிபர்

மாலத்தீவு: இந்தியா மாலத்தீவு மோதல் தொடரும் நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை அந்த நாட்டிலேயே எழுந்துள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியா குறித்தும் இந்தியப் பிரதமர் மோடி குறித்தும் அந்நாட்டு அமைச்சர்கள் கூறிய கருத்துகளே இதற்கு காரணமாகும்.

மன்னிப்பு கேட்கணும்: இதற்கிடையே மாலத்தீவில் இருந்து இப்போது புதிய குரல் எழுந்துள்ளது. அதாவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸூ முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அங்குள்ள ஜும்ஹூரி கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இந்தியா மற்றும் மோடி குறித்து மூன்று மாலத்தீவு அமைச்சர் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், இப்ராஹிம் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “சீனா பயணத்திற்குப் பிறகு அவர் தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் முறைப்படி மன்னிப்பு கேட்குமாறு மாலத்தீவு அதிபர் முய்ஸுவை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா மற்றும் மாலதீவுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. எந்தவொரு நாட்டைப் பற்றியும், குறிப்பாக அண்டை நாடு குறித்து, அந்த நாடு உடனான உறவைப் பாதிக்கும் வகையில் நாம் பேசக்கூடாது. நமது நாட்டிற்கு என்று ஒரு கடமை உள்ளது, அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ரொம்பவே ஆபத்து: ‘இந்தியா அவுட்’ என்ற ஆபத்தான பிரச்சாரத்தை முய்ஸு கையில் எடுத்துள்ளார். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும். தற்போதைய அதிபருக்கு முன்பு ஆதரவாக இருந்தவர்களே கூட முய்ஸு நடவடிக்கைகளைக் கேள்வி எழுப்புகின்றனர்.. இந்தியர்களை வெளியேறச் சொல்வது நமது நாட்டிற்கு நஷ்டத்தை மட்டுமே விளைவிக்கும். இந்த நடவடிக்கை தேவையில்லாதது. அதைச் செய்யக் கூடாது என்றே நான் முய்ஸுவிடம் கூறுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் மாலத்தீவு இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றிருந்த நிலையில், அது தொடர்பான படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அது டிரெண்டான நிலையில், இது தொடர்பாக மிகவும் மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் மிக மோசமான கருத்துகளைக் கூறினர். இது மிகப் பெரியளவில் சர்ச்சையானது. மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துகளுக்கு இந்தியாவில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

என்ன பிரச்சினை: இதற்கிடையே இணையத்தில் மாலத்தீவைப் புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. பலரும் மாலத்தீவுக்கு புக் செய்த விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் புக்கிங்களை கேன்சல் செய்ததாகவும் இணையத்தில் பதிவிட்டனர். மேலும், பலரும் இனி மாலத்தீவுக்குச் செல்லவே போவதில்லை என்றும் குறிப்பிட்டனர். முழுக்க முழுக்க சுற்றுலாவை நம்பி இருக்கும் மாலத்தீவுக்கு இது மிகப் பெரிய அடியாகவே பார்க்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள்: சமீபத்தில் மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை மாலத்தீவு 1.74 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து வெறும் 13,989 பேர் மட்டுமே மாலத்தீவுக்குச் சென்றுள்ளனர்.

இந்த லிஸ்டில் ரஷ்யா தான் முதலிடத்தில் இருக்கிறது. ரஷ்யாவில் இருந்து சுமார் 18,561 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். இத்தாலி (18,111), சீனா (16,529) மற்றும் இங்கிலாந்து (14,588) ஆகிய நாடுகளுக்கு பிறகே இந்தியா வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here