மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடவில்லை; திட்டவட்டமாக அறிவித்தது பாமக

க்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி இல்லை எனவும், கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணிகளை உறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக பாமகவின் பொதுக்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில், சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக மறைந்த காடுவெட்டி குருவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி இல்லை எனவும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநில நலன், தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதுகுறித்து முடிவு செய்யவும், கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கி பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிட்டது. 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாமக, தற்போது மக்களவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here