கோலாலம்பூர்:
கடந்த வாரம் தன் தந்தையைத் தாக்கியவரை அடையாளம் காண பெண் ஒருவர் ஃபேஸ்புக்கின் உதவியை நாடியுள்ளார்.
அச்சம்பவம் சென்ற மாதம் 30ஆம் தேதி நிகழ்ந்ததாக சரஸ்வதி சிவபாலன் எனும் கணக்குக் கொண்ட அந்தப்பெண் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
பூச்சோங் நகரில் காலை ஒன்பது மணிக்கு ஜாலான் பிபி 2/5, தாமான் புத்ரா பிரிமா எனும் பகுதியில் சம்பவம் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“74 வயதான என் தந்தையைப் பட்டப்பகலில் சாலையில் ஒருவர் தாக்கினார். காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால், சந்தேக நபர் தலைமறைவாகிவிட்டார்.
“என் தந்தைக்கு ஏற்பட்ட காயங்களால் அவருக்கு மூன்று இடங்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டது; வீக்கமும் ஏற்பட்டுள்ளது. அவரின் வாய்ப் பகுதியை சீராக்க வேண்டியிருந்தது. இந்தத் தாக்குதலால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது,” என்று சரஸ்வதி தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
சந்தேக நபர் பெரோடுவா அக்சியா காரை ஓட்டிச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
“011-21214397 என்ற எண்ணையோ அருகில் இருக்கும் காவல் நிலையத்தையோ தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ளுங்கள். இச்சம்பவம் பதிவான காணொளி இருந்தால் உடனே அனுப்புங்கள்,” என்று சரஸ்வதி கேட்டுக்கொண்டார். தன் தந்தைக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யுமாறும் அவர் வேண்டிக்கொண்டார்.









