கோலாலம்பூர்:
குடிநுழைவுத் துறையின் மறுசீரமைப்புத் திட்டம் (RTK) 2.0 க்கு விண்ணப்பிப்பதாக கூறி, மோசடியில் ஈடுபட்டுவந்த வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவரை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.
“இரண்டு வாரங்களாக கிடைத்த புகார்கள் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில், நேற்றிரவு 10 மணியளவில், சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு வளாகத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக JIM இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
மோசடிக் கும்பலின் முக்கிய மூளையாக சந்தேகிக்கப்படும் 31 வயது வங்காளதேச நபரை கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட போது, குறித்த சந்தேக நபரிடம் மலேசியாவில் இருப்பதற்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இல்லை” என அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரிடமிருந்து RM2,000 ரொக்கம், 188 வங்காளதேச கடவுச்சீட்டுகள், 5 இந்தோனேசிய கடவுச்சீட்டுகள், 4 இந்திய கடவுச்சீட்டுகள், 4 பாகிஸ்தானிய கடவுச்சீட்டுகள், 4 நேபாள கடவுச்சீட்டுகள் மற்றும் ஒரு தாய்லாந்து கடவுச்சீட்டு ஆகியவற்றை குடிநுழைவு துறை கைப்பற்றியதாக ரஸ்லின் கூறினார்.
மேலும், அவரிடமிருந்து பல்வேறு RTK 2.0 திட்ட விண்ணப்பப் படிவங்கள் மற்றும் ஒரு மடிக்கணினியையும் JIM பறிமுதல் செய்தது என்றார்.
இந்தக் கும்பல் மலேசியாவில் அடையாள ஆவணங்கள் மற்றும் விசாக்கள் இல்லாத பிரச்சனைகள் உள்ள வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளைச் சேர்ந்த நபர்களை குறிவைக்கிறது என்றும், இது ஒரு வருடமாக செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது என்றும், ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளுக்கும் RM7,000 வசூலிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
குடிவரவுச் சட்டம் 1959/63, கடவுச்சீட்டுச் சட்டம் 1966 மற்றும் குடிவரவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் சந்தேகத்தின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக புத்ராஜெயா குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.








