‘AI’ மூலம் SPB யின் குரல்; தெலுங்கு இசையமைப்பாளருக்கு சரண் நோட்டீஸ்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தெலுங்கில் S.P. பாலசுப்ரமணியம் குரல் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தன் தந்தையின் குரலைப் பயன்படுத்திய தெலுங்கு பட இசையமைப்பாளருக்கு அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி. சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இந்த டிஜிட்டல் யுகத்தினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது போன்ற நெகட்டிவான விஷயங்கள் இருந்தாலும், பல நல்ல விஷயங்களுக்காகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், காலம் சென்ற பாடகர்களின் குரல்களை மீண்டும் திரைக்கு கொண்டு வர இந்த AI தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி மறைந்த பாடகர்கள் S. P. பாலசுப்ரமணியம் குரல் ‘ஜெயிலர்’ படத்தில் பயன்படுத்தப்பட்டது.

தற்போது ‘கீடா கோலா’ என்ற தெலுங்கு படத்தில் S.P பாலசுப்ரமணியம் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் விவேக் சாகர் அவருடைய பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், இது அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் முறையான அனுமதி கேட்காமல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு S.P பாலசுப்பிரமணியம் மகன் S.P.B சரண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “எனது அப்பா மறைவுக்குப் பிறகு தொழில்நுட்பம் மூலம் அவரது குரல் இந்த வகையில் பயன்படுத்தப் படுகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், இது எங்களுக்குத் தெரியப்படுத்தப்படாமலும் அனுமதி பெறாமலும் பயன்படுத்தப்படுகிறது என்பது வேதனையான விஷயம். வணிகச் சுரண்டலுக்காக ஒரு லெஜெண்டின் குரல் இப்படிப் பயன்படுத்தக் கூடாது. இதே நிலை தொடர்ந்தால், இசைத் துறைக்கு மதிப்புமிக்கவர்களாக இருக்கும் தற்போதைய மற்றும் வருங்கால பாடகர்களின் வாழ்வாதாரம் வருங்காலத்தில் சூன்யமாகப் போகும்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், முறையான அனுமதி பெறாமல் தனது தந்தையின் குரலைப் பயன்படுத்தியதற்கான மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here