பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் பலி; இருவர் காயம்

ஜோகூர் பாரு:

பாசீர் கூடாங் நெடுஞ்சாலையின் 18.8 ஆவது கிலோமீட்டரில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.

இன்று (மார்ச் 6) அதிகாலை 2.21 மணியளவில் ஒரு டிரெய்லர் மற்றும் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட குறித்த விபத்து நிகழ்ந்ததாக தென் ஜோகூர் பாரு OCPD துணை ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

“கன்டெய்னர்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் தஞ்சோங் பெலேபாஸிலிருந்து பாசீர் கூடாங்கிற்குச் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து, சாலைதடுப்பில் மோதி எதிர் பாதையில் நுழைந்தது. பின் சாலையின் நடுவில் கிடைமட்டமாக புரண்டது.

“அப்போது பாசீர் கூடாங்கில் இருந்து வந்த மூன்று கார்கள் அதன் மீது மோதின,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதில் இரண்டு கார்களின் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பயணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் கூறினார்.

“லோரியின் ஓட்டுநர் மற்றும் மூன்றாவது கார் ஓட்டுநர் ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாயினர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here