ஜோகூர் பாரு:
பாங்குனன் சுல்தான் இஸ்கந்தரில் (BSI) உள்ள சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) வளாகத்திற்கு பாதசாரி களுக்கான மூன்றாவது வழியை அறிமுகப்படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு புத்ராஜெயா ஒப்புதல் அளித்துள்ளது.
ஜாலான் லிங்ககரான் வழியாக ஹகோ ஹோட்டலுக்கு அருகில் உள்ள மூன்றாவது பாதை, CIQ க்கு நேரடி தொடர்பை வழங்குகிறது என்று, மாநிலப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்புக் குழுத் தலைவர் முகமட் ஃபஸ்லி முகமட் சாலே கூறினார்.
ஏற்கனவே பாதசாரிகளுக்காக தற்போது ஜலான் ஜிம் கியூ மற்றும் ஜாலான் துன் ரசாக் வழியாக இரு நடை பாதைகள் CIQ -BSIக்கு வருவதற்கு பயன்படுத்தப்படுகின்றன . இந்நிலையில் முன்மொழியப்பட்ட இந்த மூன்றாவது குறுக்குவழியானது, ஜேபி சென்ட்ரலைத் தவிர்த்து, CIQ -BSI வளாகத்திற்கு செல்லும் முதல் நேரடி பாதசாரி பாதையாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசியின் இறுதி ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள இந்த பாதையின் சோதனை, வரவிருக்கும் வாரங்களில் தொடங்கும் என்றும், சோதனை ஓட்டத்திற்கு முன்னதாக இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.