சுக்மா 2024 போட்டி:  சிலம்பக் கழகத்தின்  180 போட்டியாளர்கள் பங்கேற்பு

(கே. ஆர். மூர்த்தி)

கூலிம், ஏப்.

சுக்மா சரவாக் 2024 போட்டியில் மலேசிய சிலம்பக்கழகத்தைச் சேர்ந்த 180 போட்டியாளர்கள் பங்கு பெறுவதாக மலேசிய சிலம்பக்கழகத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எம். சுரேஸ் தெரிவித்தார்.

சுக்கான் மலேசியா எனப்படும் சுக்மா 2024 வரும் ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கூச்சிங்கில் நடைபெறவுள்ளது.தேசிய விளையாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள  சுக்மா 2024 போட்டியில் மலேசிய சிலம்பக்கழகம் சிலம்ப போட்டியை அதிகாரப்பூர்வமாக நடத்தவுள்ளது.

21ஆவது சுக்மாவில் 37 வகையான விளையாட்டுகள் நடைபெறவுள்ளன. அதில் ஒன்றுதான் சிலம்பப் போட்டி. இப்போட்டி ஆகஸ்டு மாதம் 20,21,22 ஆகிய மூன்று நாட்கள் சரவாக், கூச்சிங்கில் அமைந்துள்ள  ஹிக்மா எக்ஸ்சேஞ்ச் இனவென்ட் சென்டரில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் 14 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களுக்கு குறி வைத்து 14 மாநிலங்களைச் சேர்ந்த 180 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர்.

சிலம்பப் போட்டியாளர்கள் பொருதல் 8 பிரிவிலும் கம்பு தனித் திறமை 2 பிரிவிலும் குத்து வரிசை தனித்திறமை 2 பிரிவிலும் குத்து வரிசை குழுப் போட்டி 1, கம்புகுழு போட்டி 1ஆகிய 14 பிரிவுகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுக்மா 2024 சிலம்ப போட்டியின் தொழில்நுட்ப இயக்குநராக எம். கே. குணாளன், நடுவர் மன்றத்தின் தலைவராக எஸ். குணாளன் ஆகிய இருவரும் செயல்படுகின்றனர்.

தொழில்நுட்ப அதிகாரிகள், 15 நடுவர்கள் உட்பட 53 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 35 அதிகாரிகள் தீபகற்ப மலேசியாவிலும் 28 அதிகாரிகள் கிழக்கு மலேசியா சரவாக்கை சேர்ந்தவர்களாவார்கள்.

மலேசிய சிலம்பக்கழகம் சுக்மாவில் நடைபெறவுள்ள சிலம்ப போட்டியை கண்டுகளிக்க இந்தியா, புருணை, கட்டார் ஆகிய மூன்று நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மலேசிய சிலம்ப கழகம் 2013ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பல சுக்மா போட்டிகளில் பங்கு பெறவில்லை. 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2024இல் சிலம்பக்கழகம் சுக்மாவில் இணைந்துள்ளது.

இனிவரும் காலங்களில் தொடர்ந்து சுக்மாவில் சிலம்பக்கழகம் இடம்பெறும் என்று நேற்றுக் காலை மக்கள் ஓசைக்கு வழங்கிய பேட்டியில்  சுரேஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here