கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் கைப்பற்றுமா?

பி.ஆர். ராஜன்

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியை வரும் மே 11ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் கைப்பற்றுமா என்று ஒரு பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது.

இத்தொகுதியில் மட்டுமன்றி தேசிய நிலையிலும் கடுமையான விவாதமாக மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை.

இத்தொகுதி ஜசெகவின் இரும்புக் கோட்டையாக இன்றளவும் திகழ்கிறது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் இந்த பெருமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பெரிக்காத்தான் நேஷனல் எதிரணி சபதம் ஏற்றுள்ளது.

இதுதான் நடக்கப்போகிறது என்று தொகுதி மக்களும் பேசி வருவது ஆச்சரியமாக உள்ளது. மக்கள் பெரும் விரக்தியில் இருப்பதை இது மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

வரும் இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் தான் வெற்றி பெறுவார் என்று அடித்துச் சொல்வோரும் உண்டு. இவ்வளவு தீர்க்கமாக இவர்கள் செல்வதற்குக் காரணம் இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஜசெக வேட்பாளருக்கு ஆதரவாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அம்னோ முழு மனத்துடன் களம் இறங்கி பாடுபடுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஜசெக – அம்னோ இடையே  அண்மைக் காலமாக நிகழ்ந்துவரும் பனிப்போர், உரசல் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

கட்டுங்கடங்காத விலைவாசி உயர்வு, உள்நாட்டு பச்சரிசி தட்டுப்பாடு, இனத்துவேஷ விவகாரத்தைக் கையாளத் தவறியது போன்றவை அன்வார் மீதான கோபத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இந்திய சமுதாயத்தைப் பொறுத்த வரை அதன் ஏமாற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்திய சமுதாயத்தினரிடம் அவர் காட்டிய அலட்சியத்திற்கு இந்த இடைத்தேர்தலில் இந்திய வேட்பாளர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஜசெக வின் லீ கீ ஹியோங் 2013, 2018, 2023 ஆகிய மூன்று தேர்தல்களில் அபார வெற்றி பெற்று கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியை அசைக்க முடியாத கோட்டையாக வைத்திருந்தார்.

அன்று நிலைமை வேறு…நடப்பு சூழ்நிலை வேறு. மலாய்க்காரர்களின் ஆதரவு பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் பேரலையாகத் திரும்பும் சாத்தியம் இருக்கிறது.

அதே போல் சீனர்களின் ஆதரவு பக்காத்தான் ஹராப்பான் பக்கமே.

நடுவில் இருப்பது இந்திய வாக்காளர்கள். இவர்களின் ஆதரவு எந்தப் பக்கம் திரும்புகிறதோ…அவரே வெற்றியாளர்.

வரும் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக கவுன்சிலர் ஷரிஃபா பக்கார், கடந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக களமிறங்கி லீயிடம் தோல்வி கண்ட கெராக்கான் கட்சியின் ஹென்றி  தியோ களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here