சென்னை: நடிகர் விஷால் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்துள்ளார். மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் நான் போட்டியிடுவேன் என்றும், தனிக்கட்சி தொடங்குவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என்பது அப்போது முடிவு செய்யப்படும் என்று நடிகர் விஷால் கூறினார்.
தற்போது லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு தமிழக அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்த உள்ளன. ஏனெனில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
நடிகர் விஷால் பேட்டி: இந்த தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிட உள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், கட்சியின் கொடி, பெயர், கோட்பாடுகளை அறிவிப்பேன் என்று கூறியதுடன், கைவசம் உள்ள படங்களை முடித்து தீவிர அரசியலில் இறங்குவேன் என்றும் விஜய் தெரிவித்திருந்தார்.
இதனால், தமிழக அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷால் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்துள்ளார். மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் நான் போட்டியிடுவேன் என்றும், தனிக்கட்சி தொடங்குவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என்பது அப்போது முடிவு செய்யப்படும் என்று நடிகர் விஷால் கூறினார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால் கூறியதாவது:-
அரசியலுக்கு வருகிறேன்: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதி இல்லை. அதனால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். ஏப்ரல் 19 ஆம் தேதி 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற செய்தியை கேட்க விரும்புகிறேன். தனிக்கட்சி தொடங்குகிறேனா இல்லை புதிய கட்சி ஆரம்பிப்பதா என்பதை அப்போது முடிவு செய்வேன் என்றார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வரும் நிலையில், நடிகர் விஷாலின் இந்த அறிவிப்பு அரசியல் மட்டும் இன்றி சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் விஜய் பாணியை பின்பற்றிய விஷால் தற்போது அரசியலிலும் அவரை பின் தொடர இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆர் கே நகர் இடைத்தேர்தல்: நடிகர் விஷாலை பொறுத்தவரை அரசியல் பணிகளில் ஏற்கனவே ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வரும் விஷால், கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அப்போது அறிக்கை மூலம் இதற்கு விளக்கம் அளித்து இருந்தார். அந்த அறிக்கையில், நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை.
மக்களில் ஒருவனாக: நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக் கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன். தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போதும் மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.