ஸ்பெயினில் காணாமற்போன 39 வயது சிங்கப்பூர் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆட்ரி ஃபாங் என்ற அந்த மாதின் உடலில் 30க்கும் அதிகமான கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டன. இது தொடர்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று, ஸ்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஃபாங்கின் உடல் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குக் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த ஹோட்டலில்தான் அவர் கடைசியாக உயிருடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறித்த பெண்ணின் உடல், சென்ற வாரம் புதன்கிழமையன்று (ஏப்ரல் 10) மர்சியா வட்டாரத்தின் அபனில்லா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லோரியில் கண்டெடுக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 16) அலிக்கான்டே வட்டாரத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஃபாங் இம்மாதம் நான்காம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து ஸ்பெயினுக்குப் புறப்பட்டார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடைசியாக ஏப்ரல் ஒன்பதாம் தேதி இரவு 8.45 மணிக்கு சாபியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் காணப்பட்டார் என்பது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொளி மூலம் தெரியவந்தது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும் ஏப்ரல் 10ஆம் தேதிவரை அவர் ஹோட்டலில் தங்குவதற்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
சென்ற வார வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 11) குடும்பத்தாரால் ஃபாங்கைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சிடம் அவரது குடும்பத்தினர் தெரியப்படுத்தினர்.
அதன்பின்னர் ஃபாங்கை அழைத்துவர ஏப்ரல் 12ஆம் தேதியன்று அவரின் சகோதரர் சாங்கி விமான நிலையத்துக்குச் சென்றார். ஆனால் ஃபாங் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தில் அவர் இல்லை என்பது தெரியவந்தது என்று, ஃபாங்கின் குடும்ப நண்பர் ஒருவர் இத்தகவலை இன்று (ஏப்ரல் 18) உறுதிப்படுத்தினார்.