பாரிஸ்:
ஆங்கில கால்வாய் வழியாகப் படகில் ஃபிரான்சிலிருந்து பிரிட்டனுக்குச் செல்ல முயன்ற கள்ளக்குடியேறிகள் ஐவர் இன்று (ஏப்ரல் 23) உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஐவரில் ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் அடங்குவர்.
சிறிய படகில் ஏறக்குறைய 110 பேர் சென்றதாக கூறப்பட்டது.
எத்தனை பேர் மீட்கப்பட்டனர், எத்தனை பேரைக் காணவில்லை என்பது குறித்த சரியான தகவல் இல்லை.
அளவுக்கு அதிகமானோர் படகில் இங்கும் அங்கும் நகர்ந்ததில் இவ்வாறு நேர்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற மேலவையில் திங்கட்கிழமை இரவு அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின்கீழ், அந்நாட்டு அரசாங்கம் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்ப முடியும். இந்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து குடியேறிகள் சிலர் இவ்வாறு கால்வாயைக் கடக்க முயன்றனர்.
குடியேறிகள் ஐவர் மாண்டது குறித்துப் பேசிய பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி, “இத்தகைய துயரச் சம்பவங்களுக்கு முடிவுகாண வேண்டும்,” என்றார்.
அண்மைய ஆண்டுகளில் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா ஆகியவற்றிலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் சிறிய படகுகளில் இங்கிலிஷ் கால்வாயைக் கடந்து பிரிட்டன் சென்றடைந்துள்ளனர்.
பிரிட்டிஷ் அரசாங்கம் குடியேறிகள் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்னுரிமை தருகிறது. ஆனால், ருவாண்டா திட்டம் மனிதநேயமற்ற செயல் என்று மனித உரிமைக் குழுக்கள் சாடுகின்றன.