(ராமேஸ்வரி ராஜா)
ஷா ஆலாம், ஏப். 25-
தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் பேராக், சித்தியவான் சுங்கை வாங்கி 2 தமிழ்ப்பள்ளி வெற்றிக் கிண்ணத்தை வாகை சூடியது. இரண்டாம் நிலையில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வெற்றிபெற்ற வேளையில் மூன்றாம் இடத்தை பந்திங் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி கைப்பற்றியது.
மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்கம், மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர்கள், கினைட், காஸ்டல் நிறுவனம் 22 ஆம் தேதி மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டியில் நாடு தழுவிய அளவில் 155 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து சுமார் 1,200 மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர் என மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றொர் -ஆசிரியர் சங்கத் தலைவர் இளங்கோவன் முனியாண்டி தெரிவித்தார்.
மாணவர்கள் திறம்பட சதுரங்கம் விளையாடியது வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தனி நபர் பிரிவிலும் மாணவர்கள் வெற்றிச் சாதனைகளை குவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு, சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன், மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன், பள்ளி வாரிய அதிகாரி உதயசூரியன், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கோவிந்த் ஆகியோர் விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்திருந்தனர்.








