கோலாலம்பூர்:
உலகெங்கும் ஓடியோடி சாதனை படைத்தனர் பண்டைத் தமிழர்கள். அதனால்தான் கப்பல் ஓட்டிய தமிழன் என்ற வரலாறும் பதித்தோம், அந்த வகையில் நம்நாட்டில் தனபாலனும் மலேசியாவிலிருந்து மோட்டார் சைக்கிளில் மதீனாவிற்கு சென்று, புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதன் மூலம் “மதீனா மண்ணில் காலடி வைத்த முதல் முஸ்லீம் அல்லாதவர்” என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
37 வயதான இவர், நேற்று சவுதி அரேபிய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஹோண்டா ஆர்எஸ் 150சிசி மோட்டார் சைக்கிளில் சவுதி அரேபியா சென்றடைந்தார்.
மலேசியாவில் ஆரம்பித்த அவரது பயணம் தாய்லாந்து, லாவோஸ், சீனா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என பல நாடுகளைக் கடக்க, 40 நாட்கள் பிடித்திருக்கிறது.

டிஎன்பி மின் விநியோக நிறுவனத்தின் மீட்டர் ரீடராக பணிபுரியும் தனபாலன் இது குறித்து பேசுகையில், இப்பயணம் தனக்கு மிகவும் மகிழ்ச்சி மிக்கதாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் இருந்தது என்றார்.
தனபாலனின் இந்த முயற்சிக்கு உலகெங்கிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தனபாலன் அவரது நண்பர்கள் பலருடன் மலேசியாவில் இருந்து கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றார், ஆனால் நேபாளத்தின் காத்மாண்டுவில் தொடங்கி சவுதி அரேபியாவுக்கு அவர் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















