எம்.எஸ்.மலையாண்டி
* 2,000 ரிங்கிட் வரை சம்பளம் வழங்க வேண்டும் என மே தினத்தில் கோரிக்கை
* ஒப்பந்த வேலை நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தல்
* வாழ்க்கைச் செலவின உயர்வு காரணமாக நிழல்போலத் தொடரும் பண நெருக்கடி
தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவது மட்டும் போதாது. ஆனால் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள விகிதமும் சலுகைகளும் அனுகூலங்களும் வழங்கப்பட வேண்டும் எனும் முழக்கம் மே தினத்தன்று தலைநகர் கோலாலம்பூரில் ஓங்கி ஒலித்தது.
தொழிலாளர்களுக்கான சம்பள விகிதத்தை உயர்த்த வேண்டும் எனும் கோரிக்கை புதியது அல்ல. அவ்வப்போது சம்பள உயர்வு கோரிக்கை எழுப்பப்பட்டு அதன் தொடர்பிலான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை மக்கள் அறிவார்கள்.
சம்பளக் கோரிக்கை என்பது தொழிற்சங்கங்களின் ஒரு தொடர் போராட்டம். இது முடிவு இல்லாத போராட்டம் என்றுகூடச் சொல்லலாம். எதையும் போராடித்தான் பெற வேண்டும் என்பது இயற்கை விதித்திருக்கும் நியதிபோல் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வையும் கோரிக்கையாக முதலில் முன்வைத்து அதற்காகப் போராட வேண்டிய நிலை காலங்காலமாக நீடித்து வருகிறது.
மே தினப் போராட்டம்
தொழிலாளர் தினமான மே முதல் தேதி தலைநகரில் உள்ள மெனாரா மே பேங்க் பகுதியிலிருந்து டத்தாரான் மெர்டேக்கா சதுக்கம் வரை நடைபெற்ற பேரணியில் கிட்டத்தட்ட 1,500 தொழிலாளர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கை என்ன என்பதை விவரித்து முழக்கமிட்டனர்.
பிஎஸ்எம் கட்சி, பழங்குடியின மக்களின் நலன் மையம், மகளிர் உதவி இயக்கம் உள்ளிட்ட 60 அமைப்புகள் இந்தப் பேரணிக்கு ஆதரவை தெரிவித்திருந்தன. வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு ஏற்ப சமானியத் தொழிலளர்களின் சம்பள விகிதம் உயர வேண்டும் என்பது இவர்களின் மிக முக்கியமான கோரிக்கையாக இந்தப் பேரணியில் முன் வைக்கப்பட்டிருந்தது.
8 கோரிக்கைகள்
இதற்கு முன் இல்லாத அளவுக்கு மொத்தம் 8 கோரிக்கைகளை முன்வைத்து பேரணியில் பங்கேற்றவர்கள் சமானியத் தொழிலாளர் நலனுக்காக முழக்கமிட்டனர். அந்த 8 கோரிக்கைகள் யாவை என்பதை இங்கு பார்ப்போம்.
1. வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்கும் வகையில் 2,000 ரிங்கிட் சம்பள நடைமுறையைக் கொண்டுவர வேண்டும். அது குறைந்தபட்ச சம்பளமாகக் கருதப்படக் கூடாது. அதுமட்டுமன்றி ஒப்பந்த வேலை முறை ரத்து செய்யப்பட வேண்டும்.
2. அரசாங்க மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவருக்கும் சுகாதாரக் கவனிப்பு உரிமை வழங்கப்பட வேண்டும்.
3. மாற்று ஏற்பாடு எதுவும் செய்யாமல் மக்களைக் கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்.
4. அந்நியத் தொழிலாளர்களுக்கும் சமச்சீரான உரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் சுரண்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
5. மளிகைச் சாமான்கள் விலையைக் கட்டுப்படுத்தி நியாயமற்ற விலையில் அவை விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.
6. ஆண், பெண் பாகுபாடு போன்ற அடிப்படை மனித உரிமைகளை மீறக்கூடிய சட்டவிதிமுறைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
7. குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம், பொதுப்போக்குவரத்து, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இனியும் தனியார் மயமாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
8. பழங்குடியின மக்களின் பூர்வீக, பாரம்பரியத் தன்மைமிக்க நிலங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
நியாயமான கோரிக்கை
எங்களைப் பொறுத்தவரையில் இவை அனைத்தும் நியாயமான கோரிக்கை எனவும் அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பிஎஸ்எம் கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் குறிப்பிட்டிருக்கின்றார்.
தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால் முதலில் சமச்சீரான சம்பள விகிதம், சலுகைகள் முதலில் அவர்களுக்கும் கிடைக்க வேண்டியது மிக முக்கியம் என்றார் அவர்.
சராசரி உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் 24 மடங்கு அதிகரித்திருக்கின்றபோதிலும் தொழிலாளர்களின் சம்பள விகிதம் 1.3 மடங்கு மட்டுமே அதிகரித்திருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டியிருப்பது கருத்தில்கொள்ள வேண்டிய ஒன்று.
மக்களின் கூட்டுமுயற்சியின் பலனாகத்தான் நாடு செழிப்படைந்திருக்கிறது. ஆனால் அதன் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மையோ சமச்சீராக இன்றி குறைவாக இருக்கிறது. நாட்டின் செல்வச் செழிப்பு சமச்சீராக பகிர்ந்தளிக்கப்பட்டு மக்களுக்கும் அதன் நன்மை போய்ச்சேர வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
ஒப்பந்த வேலைமுறை
சம்பள விகிதம் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு ஏற்ப உயரவில்லை என்ற மனக்குமுறல் சாதாரண தொழிலாளர்களிடம் இருக்கும் வேளையில் ஒப்பந்த வேலை நடைமுறையும் தங்களுக்கு பாதகமாகவே இருக்கிறது என்று ஒரு தரப்பு தொழிலாளர்கள் முறையிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
ஒப்பநத வேலைமுறை ரத்து செய்யப்பட்டு நிரந்தர வேலை நடைமுறை கொண்டு வரப்பட்டால்தான் தொழிலாளர்கள் நிம்மதியாக நியாயமான சம்பளத்துடன் வேலை செய்யமுடியும் என்று கூறுகிறார் தைப்பிங் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் ரோஸியா அஸிம் என்பவர்.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் நான் வேலை செய்து வருகிறேன். சராசரியாக மாதம் 1,500 ரிங்கிட் சம்பளம் கிடைக்கிறது. மிகை நேர வேலை செய்தால் சில சமயம் சம்பளம் மாதம் 1,800 ரிங்கிட்வரை கிடைக்கும் என்கிறார் இவர்.
தற்போதைய சூழலில் இந்தச் சம்பள விகிதம் போதுமா? ஆகவேதான் நாடு முழுமையும் உள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் நிரந்தர வேலை, நியாயமான சம்பளம், நியாயமான அனுகூலங்கள் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர்.
தொடரும் சுமை
சாமானியத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் நிதிச்சுமைகள் தற்போதைய சூழ்நிலையில் சங்கிலித் தொடர்போல் நீடிக்கின்றன என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர். வாழ்க்கைச் செலவினத்துடன் ஒப்பிடுகையில் 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம் என்பது மிக மிகக் குறைவே என்பதையும் அவர்கள் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
வாழ்க்கைச் செலவின உயர்வு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு போன்றவற்றால் பி40 தரப்பைச் சேர்ந்த மக்களும் சமானியத் தொழிலாளர்களும் அங்காடி வியாபாரிகளும் வசதி குறைந்த மாணவர்களும் சுயவேலை செய்யும் தொழிலாளர்களும் வேலை இல்லாதவர்களும் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
நடுத்தர வர்க்கத்தினரும்கூட இந்தப் பாதிப்பிலிருந்து தப்ப முடியவில்லை. அதாவது சாமானியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 2,000 ரிங்கிட் சம்பளம் வழங்க வேண்டும் எனும் முழக்கம் நியாயமானதே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
புகார்கள் பற்றி விசாரணை
இந்த நிலையில் சில தரப்பு தொழிலாளர்களுக்கு அரசு உத்தரவிட்டதுபோல் 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளம் கிடைப்பதில்லை என்ற புகார்கள் குறித்து அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என எம்டியூசி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் முகமட் எஃபெண்டி அப்துல் கனி சில தினங்களுக்கு முன்பு வலியுறுத்தியிருந்தார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஈராண்டுகளுக்கு முன்பு குறைந்தபட்ச சம்பளம் 1,500 ரிங்கிட் எனும் உத்தரவு அமலுக்கு வந்தது. ஆனால் சில முதலாளிகள் இதைக் கடைப்பிடிப்பதில்லை என்று புகார்கள் வருகின்றன.
தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் ஏற்படக்கூடிய செலவினங்களைக் குறைப்பதற்கு சிலர் 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத்தைக் கொடுப்பதில்லை என்று புகார்கள் வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மக்களவையில் முற்போக்கு சம்பளக் கொள்கை பரிந்துரை மீதான வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்த பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி, அதிகாரப்பூர்வ தொழில்துறை தொழிலாளர்களுள் 10 விழுக்காட்டினர் 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத்தைவிட குறைந்த விகிதத்தில்தான் சம்பளத்தைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இது விசாரிக்கப்பட வேண்டிய விஷயமாகும். தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர நியாயமான சம்பளம் அவர்கள் கைகளுக்குக் கிடைக்க வேண்டும். அப்படி இல்லையேல் அவர்களின் வாழ்க்கைத்தரம் எப்படி உயரும்?
பிஎஸ்எம் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார்
அமைச்சர் ரஃபிஸி ரம்லி
எம்டியூசி தலைவர் முகமட் எஃபெண்டி