வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் செல்போனை மாற்றும் முன்பாக தங்களின் பழைய தகவல்களை சேமித்து வைப்பது எப்படி என்பது குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் பயனர்களின் எண்ணிக்கை பல நூறு கோடிகளைத் தாண்டி உள்ளது. எளிமையான தகவல் பரிமாற்றம், வீடியோ மற்றும் ஆடியோ கால்கள் செய்யும் வசதி, புகைப்படம், வீடியோக்கள், டாக்குமென்ட்கள் ஆகியவற்றை பகிரக் கூடிய வசதிகள் ஆகியவை வாட்ஸ் ஆப்பின் சிறப்பம்சங்களாக இருந்து வருகிறது.
வாட்ஸ் ஆப்புக்கு போட்டியாகத் துவங்கப்பட்ட ஏராளமான தகவல் பரிமாற்ற செயலிகள் பயன்பாட்டில் இல்லாமலேயே சென்று விட்டன. ஆனாலும் வாட்ஸ்ஆப் ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டு வருவதால் இண்டஸ்ட்ரி லீடர் எனப்படும் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது.
வாட்ஸ்ஆப் பயனாளர்கள் பலரிடமும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை அடிக்கடி செல்போன்களை மாற்றும்போது வாட்ஸ் ஆப்பில் உள்ள பழைய தகவல்கள் அழிந்து விடுவது என்பதாக இருக்கிறது. ஆனால், இதனை எதிர்கொள்ளவும் வாட்ஸ் ஆப்பில் அட்டகாசமான அம்சம் ஒன்று இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.
அடிக்கடி செல்போன்களை மாற்றும் பயனர்களுக்காகவே வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் பேக்கப் என்ற வசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் தகவல்களை ஒரே ஃபைலாக சேமித்து வைத்துக் கொண்டு, உங்கள் செல்போனை மாற்றும்போது அந்த ஃபைலை மட்டும் செல்போனுக்கு மாற்றினால் போதுமானது.
நீங்கள் ஐபோன் பயனராக இருந்தால், அதில் உள்ள வாட்ஸ் ஆப் செயலியை திறந்து கொள்ளுங்கள். பின்னர் செட்டிங்ஸ் தேர்வு செய்யுங்கள். அதில் சாட்ஸ் என்பதை தேர்வு செய்யவும். பின்னர் சாட் பேக்கப் தேர்வு செய்யவும். பேக்கப் நவ் என்ற வசதியை பயன்படுத்தி உங்களை தகவல்களை சேமித்துக் கொள்ளுங்கள்.
அவசர காலங்களில் இது போன்று செய்ய முடியாது என்பதால், முன்கூட்டியே ஆட்டோ பேக்கப் என்ற தானியங்கி பேக்கப் வசதியை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதே முறையில் ஆண்ட்ராய்டு போன்களிலும் உங்கள் வாட்ஸ்ஆப் தகவல்களை நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.