கலிஃபோர்னியா:
மனைவியை சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தென்கலிஃபோர்னிய நீதிபதியிடம் இருந்து 47 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
ஜெஃப்ரி ஃபெர்குசன், 72, எனப்படும் அவர் ஆரஞ்சு கவுண்டி உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். கலிஃபோர்னியாவின் அனாஹெய்ம் நகரில் உள்ள வீட்டில் அவரது மனைவி ஷெரில் ஃபெர்குசன், 65, ஆகஸ்ட் 3ஆம் தேதி மாண்டுகிடக்கக் காணப்பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் அவரது உடலில் காணப்பட்டன.
இச்சம்பவத்திற்காக நீதிபதி ஃபெர்குசன் கைது செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன், மரணத்தையும் கடுமையான காயங்களையும் விளைவிக்கக்கூடிய ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதியின் தற்காப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை தமது சொந்த விவகாரத்துக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது.
உணவகம் ஒன்றில் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வீடு திரும்பிய பின்னரும் வாக்குவாதம் தொடர்ந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.





















