ஈப்போ:
அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டுச் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய சில தரப்பினரை பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறைகூறியுள்ளார்.
அத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படக்கூடாது என்றார் அவர்.
தீயணைப்பு, மீட்புத் துறையினர் போன்ற அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்பையும், தியாகத்தையும் அங்கீகரிக்கும் வகையில் சம்பளக் அதிகரிப்பு வழங்கப்படுவதே அதற்குக் காரணம் என்று அன்வார் கூறினார்.

இராணுவம், காவல்துறை, தீயணைப்புச் சேவைகள் போன்ற அமைப்புகளின் அர்ப்பணிப்பால் நாட்டில் தற்போது அமைதியும் பாதுகாப்பும் இருப்பதாக இன்று (மே 4) “தம்புனில் நடந்த ‘உலகத் தீயணைப்பாளர்கள் தினம் 2024’ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, உரையாரியாபோது அவர் கூறினார்.

“தற்போதைய பொருளாதார சூழலில் அரசாங்கம் ஏன் அரசாங்க ஊழியர்களின் படித்தொகைகள், சம்பளங்கள், ஊதியங்களை அதிகரிக்கிறது என்று அவர்கள் சில நேரம் கேட்பதுண்டு.
“சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சேவைகளாலும் தியாகங்களாலும் இந்த நாடு தீச்சம்பவங்களிலிருந்தும் நிலச்சரிவுகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் நாம் அங்கீகாரம் வழங்குகிறோம்,” என்று பிரதமர் கூறினார்.
வரும் டிசம்பர் மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பள உயர்வை அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் வாயிலாக நடைமுறைப்படுத்த முடியும் என்றும் பிரதமர் சொன்னார்.

இன்ன நிகழ்ச்சியில் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாராணி முஹமட், வீடமைப்பு, உள்ளக அமைச்சர் ஙா கோர் மிங், தீயணைப்பு, மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




















