வாஷிங்டன்:
ராஃபா மீது பேரளவிலான தாக்குதலை இஸ்ரேல் நடத்தினால் அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அதிபர் பைடன் இஸ்ரேலைப் பகிரங்கமாக எச்சரித்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
“இஸ்ரேலிடம் தெளிவாக, உறுதியாகக் கூறிவிட்டேன். ராஃபா மீது அது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா அதற்கு ஆயுதங்களை அனுப்பாது என்று தெரிவித்துவிட்டேன்,” என்று சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் பைடன் கூறினார்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஏழு மாதங்களாகப் போரிட்டு வருகிறது.
இதில் காஸா மீது அது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அமெரிக்கா வழங்கிய குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியதில் காஸாவைச் சேர்ந்த பல அப்பாவி மக்கள் மாண்டுவிட்டதாக அதிபர் பைடன் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் மே 9ஆம் தேதி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.