லோரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி; ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திர மாநிலம் கரிக்காபாடு சோதனைச் சாவடியில், குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு ரகசிய அறையில் பதுக்கி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம்- ஜனசேனா- பாஜக கூட்டணி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்டிஆர் மாவட்ட போலீசார் நேற்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து பணத்தை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் சோதனை நடத்தி, ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 8 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய ஜக்கையாபேட்டை வட்ட காவல் ஆய்வாளர் சந்திரசேகர், “பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தொகையை மாவட்ட தேர்தல் ஆய்வுக் குழுக்களிடம் ஒப்படைப்போம். தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை குழுவினர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஹைதராபாத்தில் இருந்து குண்டூருக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here