27,700 கோடி ரிங்கிட் இழப்பா?

பி. ஆர். ராஜன்

நாட்டில் லஞ்ச லாவண்யம் மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் வெளியிட்டிருக்கும் ஒரு தகவல் வழி நிரூபணமாகி இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம் லாவண்யம் வழி நாடு மொத்தமாக 277 பில்லியன் (27,700 கோடி) ரிங்கிட்டை இழந்திருக்கிறது என்று டான்ஸ்ரீ அஸாம் பாக்கி வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

2018 ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டுக்கிடையில் ஐந்து ஆண்டுகளில் 27,700 கோடி ரிங்கிட் இழப்பு என்பது மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. லஞ்சம் தலைவிரித்தாடியிருப்பதை இத்தொகை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை நாடு இழந்திருப்பதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும். ஒரு சிறப்புப் பணிக் குழுவை விரைந்து அமைத்து இதன் தொடர்பான புலன் விசாரணையைத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

2018ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை ஆட்சி பீடத்தில் இருந்தவர்கள் இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். லஞ்சத்தின் வழிதான் இவ்வளவு பெரிய தொகை இழக்கப்பட்டிருக்கிறது என்பது தௌ்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இனியும் தாமதிக்காது உடனடியாக புலன் விசாரணைகளை முடுக்கிவிட்டு இந்த 27,700 கோடி ரிங்கிட்டை சுரண்டியவர்களின் முகங்களை நாட்டு மக்களுக்குக் காட்டவேண்டும். ஐந்து ஆண்டுகள் மௌனமாக இருந்தது போதும். அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது எம்ஏசிசி என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.  பந்து இப்போது எம்ஏசிசி கால்களில் உள்ளது. கோல் அடித்தே ஆகவேண்டும்.

இந்த ஐந்து ஆண்டுகள் காலகட்டத்தில் மத்திய அரசாங்கம் நான்கு முறை மாற்றம் கண்டிருக்கிறது. 2018 மே 9ஆம் தேதி நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான்   நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றது.

இருப்பினும், 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷெரட்டன் நகர்வு வழி துன் டாக்டர் மகாதீர் முகம்மது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனை அடுத்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராகப் பதவி ஏற்றார்.

அப்போது கோவிட்–19 கொடுந்தொற்று நாட்டையும் மக்களையும் வாட்டி வதைத்தது.  2020 மார்ச் 18ஆம் தேதி தொடங்கி நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேசமயத்தில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 2021 ஆகஸ்டு 21ஆம் தேதி நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றார். 2021 டிசம்பர் 31ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஒரு முடிவுக்கு வந்தது.

2022 நவம்பர் 19ஆம் தேதி நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. நாட்டின் 10ஆவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி ஏற்றார். அவரது தலைமையில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது.  இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு நிலைகளில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடியிருக்கிறது.

இப்போது அனைத்து நிலைகளிலுமான ஒரு விரிவான புலன்விசாரணை அவசியமாகிறது. இதில் யாரும் விடுபட்டுவிடக்கூடாது.  சந்தேகத்திற்குரிய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்.  உண்மையின் ஆணிவேரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த ஐந்தாண்டுகளில் நாட்டை நிர்வகித்த அனைத்து அரசாங்கங்களும் எம்ஏசிசி விசாரணை வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டு புலன்விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய தலைவர்கள், அமைச்சுகள், அரசாங்க ஏஜென்சிகள், அரசாங்க இலாகாக்கள், புலன்விசாரணைக்கு அவசியம் அழைக்கப்பட வேண்டும்.

வலுவான ஆதாரங்களைத் திரட்டி சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். இதற்காக நாட்டு நலனிலும் மக்கள் நலன்களிலும் அக்கறைக் கொண்ட தலைவர்கள் தலைமையில்ஒரு சிறப்பு அரச ஆணைய பணிக் குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

இதுவோர் எளிதான பணியல்ல. ஆனால், உடனடியாக புலன்விசாரணை தொடங்கப்படாவிட்டால் பலன் இருக்காது.  இன்னமும் தாமதமாகிவிடவில்லை.  லஞ்ச லாவண்யத்தை அடியோடு வேரறுப்போம் என்ற மலேசிய மடானி அரசாங்கத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப அதனை வேரறுக்கும் பணியை எம்ஏசிசி விரைந்து செய்திடல் வேண்டும்.

அரசியல் செல்வாக்குகள் அல்லது பழிவாங்கத் துடிப்போரின் முகத்திரைகளை கிழித்தெறிந்து டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தலைமையிலான எம்ஏசிசி களமிறங்க வேண்டும்.­

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here