காவல் அதிகாரியின் தலையைக் கத்தியால் பலமுறை குத்திய ஆடவர் கைது!

சிட்னி:

காவல்துறை அதிகாரியின் தலையைப் பலமுறை கத்தியால் குத்தியதன் தொடர்பில் 33 வயது சந்தேக நபர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் இச்சம்பவம் மே 19ஆம் தேதி பகல் 1 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஹைட் பார்க் அருகே போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை, சமையலுக்குப் பயன்படுத்தும் 30 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியுடன் ஆடவர் வழிமறித்ததாக நம்பப்படுகிறது.

அதிகாரிகளுக்கு அருகே சென்றபோது ஆடவர் எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிகாரி தலையின் பின்பக்கத்தில் கத்தியைக் கொண்டு ஆடவர் பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயமுற்ற அதிகாரியும் பெண் அதிகாரி ஒருவரும் ஆடவரைத் துரத்த முயன்றனர்.

பின்னர், ஹைட் பார்க்கில் மற்ற காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் ஆடவர் ‘டேசர்’ துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைதாகும்வரை ஆடவர் அந்தக் கத்தியைக் கையில் வைத்திருந்ததாகவும் தன்னை அதிகாரிகள் சுட வேண்டும் என்று ஆடவர் கோரியதாகவும் துப்பறியும் கண்காணிப்பாளர் மார்டின் ஃபைல்மேன் கூறினார்.

சிறு குற்றங்கள் தொடர்பில் அதிகாரிகள் அந்த ஆடவரை அறிந்திருந்தாலும் மனநோய் இருந்ததற்கான அறிகுறி அந்த ஆடவரிடம் இருந்ததில்லை என்றார் அவர்.

மருத்துவமனை மதிப்பீட்டுக்காக காவல்துறை கண்காணிப்புடன் ஆடவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் அதிகாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயமுற்ற நிலையிலும் தம்மைத் தாக்கிய ஆடவரை விடாமல் துரத்திய அதிகாரியைக் கண்காணிப்பாளர் ஃபைல்மேன் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here