வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப நாமும் நம்மை முன்னேற்றி கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்பதனை மறுக்க இயலாது. இன்றைய நவீன கால கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்து நாம் அதிகமாக பேசி வருகிறோம். அந்த வகையில் எம்எஸ்யு செயற்கை நுண்ணறிவு கல்விக்கு அதிக முக்கியத்துவத்தையும் அதன் பயன்பாட்டையும் கற்பிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக எம்எஸ்யு ஸ்தாகபரும், தலைவருமான டான்ஶ்ரீ டத்தோ வீரா டாக்டர் முகமட் ஷீக்ரி அப்துல் யாஜிப் தெரிவித்தார்.
அனைத்து துறைகளுக்கும் செயற்கை நுண்ணறிவின் தேவை இருப்பதால் அக்கல்வியின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருவதாக அவர் கூறினார். எம்எஸ்யுவில் மொத்தம் 65 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதில் 29 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு கல்வியை பயின்று வருகின்றனர். அடுத்தாண்டு 100 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் எம்எஸ்யுவில் கல்வி பயில்வார்கள் என நாங்கள் நம்புகிறோம் என்றார். 33ஆவது பட்டமளிப்பு விழாவில் 128 கல்வி துறைகளில் மொத்தம் 2,253 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். அதில் 25 பேர் முனைவர் கல்வியிலும், முதுகலைத் துறையில் 42 பேரும், இளங்கலை துறையில் 1,285 பேரும், டிப்ளமோ துறையில் 901 பேரும் பட்டம் பெற்றுள்ளனர்.
வர்த்தகத் துறையில் பட்டம் பெற்ற கீர்த்தனா கூறுகையில் வளர்ந்து வரும் கால கட்டத்திற்கேற்ப வர்த்தகமும் பெருகி வருகிறது. இந்தத் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதை அறிந்து இத்துறையை தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார். அதே வேளை இளங்கலைத் துறையில் நிகழ்ச்சி மேலாண்மைத் துறை கல்வி பயின்ற தாந்தியர் கவுர் அனைத்து காலகட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது இன்றியமையாதது என்பதால் தான் இத்துறையை தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். விளையாட்டு வடிவமைப்பு மற்றும் அனிமேஷன் துறையில் பட்டம் பெற்றறிருக்கும் கிஷன் தயாளன் தனக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டில ஆர்வம் இருந்தால் விளையாட்டு வடிவமைப்பாளர் துறையை தேர்ந்தெடுத்தேன் என்கிறார்.
தன் தந்தை செய்து வரும் தொழிலுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நிதி துறையை தான் தேர்வு செய்ததாக கிஷன் தயாளன் தெரிவித்தார். பெண்கள் ஆணுக்கு சரி நிகரானவர்கள் என்பது நிரூபிக்க வேண்டும் என்று தான் அறிவியல் மற்றும் மெக்கானிகல் இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்தேன் என்கிறார் ஹிராஷினி கணேசன். மேலும் உட்கார்ந்த இடத்தில் இருந்து தனக்கு வேலை செய்ய பிடிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டம் பெறும் பொழுதே வேலை செய்து வருபவரும் முதல் தர ஹானர்ஸ் பட்டம் பெற்றவருமான யுவதாரணி ரவீந்திரன் கணினி தடவியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். குற்றப் பின்னணியை அறிந்து கொள்வதில் ஏற்பட்ட ஆர்வத்தால் இத்துறையை தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார். அதே துறையில் பட்டம் பெற்றிருக்கும் பேராக்கை சேர்ந்த எஷ்விண்டர் கவுர் பரம்ஜிட் சிங் கூறுகையில் இந்த கல்வி தனக்கு பரந்த அனுபவத்தை தந்திருப்பதாகக் கூறினார்.
பயோ இன்பர்மேடிக் துறையில் பட்டம் பெற்றிருக்கும் ஸேக்ரி ராஜ் ஜேம்ஸ் தேவராஜ் தான் மேற்கொண்ட கல்வி வழி புற்று நோய் உள்ளிட்ட பல ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியும் என்கிறார். இவரும் முதல் தர ஹானர்ஸ் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாஶ்ரீ 4 வருட ஊட்டச்சத்து துறையை தேர்வு செய்து பட்டம் பெற்றுள்ளார். தன்னால் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர் நோக்குபவர்களுக்கு ஆலோசனை வழங்க முடியும் என்பதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.