ஷா ஆலம்: சிலாங்கூர் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் இரவுப் பணிகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும் பார்த்து வருகிறோம் என்று மாநில காவல்துறை தலைவர் கம்யூன் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார். வெள்ளிக்கிழமை (மே 17) ஜோகூர் உலு திராம் காவல்நிலையத்தில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்நிலையங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போலீஸ் படைத் தலைவர் ஏற்கனவே எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திங்களன்று (மே 20) மாநில காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காவல்துறையுடன் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். உதாரணமாக, கேன்டீனில் சாப்பிட வர வேண்டும் என்று யாராவது சொன்னால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.
மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட காவல்துறை தலைமையகங்களில் உள்ள முக்கிய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமிரா நிறுவி வருவதாகவும் அவர் கூறினார். இரவு பணி நேரத்தின் போது அதிக ஆட்பலத்தை சேர்ப்பது… பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு சம்பவத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இருக்கும் என்று அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை, முகமூடி அணிந்த மோட்டார் சைக்கிளோட்டி உலு திராம் காவல் நிலைய வளாகத்திற்குள் நுழைந்து, அவரை எதிர்கொண்ட ஒரு காவலரை வெட்டிக் கொன்றார். பின்னர் அவர் கொலையுண்டவரின் துப்பாக்கியைப் பிடுங்கி மேலும் இரண்டு போலீஸ்காரர்களை சுட்டதில் அதில் ஒருவர் கொல்லப்பட்ட வேளை மற்றொருவர் பலத்த காயங்களுக்கு ஆளானார். தாக்குதல் நடத்தியவரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.








