டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது.
9 ஆவது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் ஜூன் 1 முதல் 29 ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில் இந்திய அணியினர் 2 குழுக்களாக அமெரிக்கா செல்கின்றனர். முதல் குழுவாக செல்லும் ரோகித் ஷர்மா, ஜடஜோ, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மும்பை விமானநிலையத்தில் இருந்து நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, மற்றொரு குழுவினர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, ஜூன் 5 ஆம் தேதி, அயர்லாந்துடன் தனது முதல் போட்டியை தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானுடன் 9 ஆம் தேதியும், அமெரிக்காவுடன் 12 ஆம் தேதியும், கனடாவுடன் 15 ஆம் தேதியும் இந்திய அணி மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டிகள் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.