பிரிட்ஜ்டவுன் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் 20 ஓவர்களின் முடிவில் 109 ரன்கள் எடுத்தன. இதை அடுத்து போட்டி டை ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் நடந்தது. அதில் நமீபியா வெற்றி பெற்றது. கத்துக்குட்டி அணிகள் ஆடிய போட்டி என்றாலும் சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஓமன் அணி முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களை இழந்து மோசமான துவக்கத்தை பெற்றது. அதன் பின் நிதானமாக ஆடிய அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களையும் இழந்தது. 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிறப்பாக பந்து வீசி முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்திய ரூபன் டிரம்பிள்மேன் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். டேவிட் வீஸ் 3.4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். எராஸ்மஸ் 2 விக்கெட்களும், பெர்னார்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
அடுத்து நமீபியா அணி சேஸிங் செய்தது. 110 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அந்த அணி எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி நிதானமாக ஆடியது. கையில் விக்கெடுகள் இருந்த போதும் தேவையில்லாமல் நிதானத்தை காட்டியதால், கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது.








