“அப்பா அம்மா இல்லாம எதுவுமில்ல!” – ஓய்வு பெறும் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி!

ஐ.பி.எல் போட்டிகளில் சிறந்த ஃபினிஷராக ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர். ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியடைந்து வெளியேறிய தருணத்தில் ஓய்வு குறித்து அறிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

2007 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியிலும் இருந்தார். சமீபத்தில், ஐ.பி.எல் இல் பெங்களூரு அணிக்காகவும் சிறப்பாக ஆடியிருந்தார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, ‘கடந்த சில நாட்களாக நீங்களெல்லாம் என் மீது பொழிந்து வரும் அன்பை எண்ணி பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்காக நான் என்றைக்கும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். என்னுடைய மனதுக்குள் இப்போது பலவிதமான எண்ணங்கள் ஓடிக்கொண்டிக்கிறது. இந்த சமயத்தில் நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

அதிகாரப்பூர்வமாக என்னுடைய ஓய்வை இப்போது அறிவிக்கிறேன். இனி வாழ்வில் எதிர்கொள்ளப்போகும் சவால்களுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். என்னுடைய நீண்ட நெடிய இந்த கரியர் மகிழ்ச்சிகரமாக அமைய காரணமாக இருந்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள், உதவியாளர்கள் எல்லாருக்குமே நன்றி.

லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமோடு கிரிக்கெட் ஆடும் இந்த நாட்டில் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆட எனக்குக் கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் அன்பை இன்னமும் சம்பாதித்துக் கொண்டிருப்பதில் கூடுதல் அதிர்ஷ்டம் பெற்றவனாக உணர்கிறேன்.

இந்த கரியரில் என் பெற்றோர் எனக்கு தவிர்க்க முடியாத ஆதரவாக இருந்திருக்கின்றனர். அவர்கள் இல்லாமல் நான் இந்த இடத்தை எட்டியிருக்க முடியாது. என்னுடைய மனைவி தீபிகாவுக்கும் நிறைய கடன்பட்டிருக்கிறேன். அவளும் ஒரு விளையாட்டு வீராங்கனை. ஆனால், பல சமயங்களில் அவருடைய கரியரை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு என்னுடைய பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். இறுதியாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. நீங்கள் இல்லாமல் கிரிக்கெட்டும் கிரிக்கெட்டர்களும் இந்த நிலையை எட்ட முடியாது.’ எனக் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here