விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பெரிய வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அது இப்போது தள்ளிப் போய் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது நாட்டில் லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல்களும் நடைபெற்றன. குறிப்பாக நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்குக் கடந்த மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன.
ஆந்திரா: கடந்த செவ்வாய்க்கிழமை லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் ஆந்திரா மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், இந்த முறை ஜெகன் கட்சி படுதோல்வி அடைந்தது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. அதேநேரம் இந்தத் தேர்தலில் பக்காவான வியூகத்துடன் களமிறங்கிய சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். அவரது கூட்டணியில் இருந்த பவன் கல்யாண் கட்சி 21 இடங்களில் வென்று ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அங்குள்ள 175 தொகுதிகளில் 135இல் வென்று சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்தார்.
தள்ளிப் போகும் பதவியேற்பு: ஆந்திர தேர்தலில் வென்ற அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஆந்திரா முதல்வராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகக் கூறப்பட்டது. சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9இல் அமராவதியில் பதவியேற்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது.. இதற்கிடையே இது இப்போது தள்ளிப் போய் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஆந்திராவில் அசைக்கவே முடியாத கிங் ஆக உருவெடுத்துள்ள சந்திரபாபு நாயுடு, தேசியளவிலும் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜக இப்போது ஆட்சியை அமைக்க சந்திரபாபு நாயுடு ஆதரவு ரொம்பவே முக்கியமாக இருக்கிறது. அவரது பேச்சுகள் அனைத்தும் தேசியளவில் முக்கியமானதாக மாறியிருக்கிறது. அவர் இந்தியா கூட்டணிக்கு வரலாம் என நேற்று சொல்லப்பட்ட நிலையில், என்டிஏ கூட்டணியில் தொடர்வதாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
என்ன காரணம்: மேலும், டெல்லியில் நடந்த என்டிஏ கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். இதன் மூலம் அவர் பாஜக கூட்டணியில் தொடர்வது உறுதியாகி இருக்கிறது. இதற்கிடையே நரேந்திர மோடி வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்கும் நிலையில், இந்த விழாவில் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்கிறார். இதன் காரணமாகவே சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தள்ளிப் போய் இருப்பதாகக் கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்கும் விழா தீவிரமாக நடந்து வந்த நிலையில், இப்போது அது ஜூன் 12ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் என்டிஏ கூட்டணியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடு இப்போது தேசியளவில் கிங் மேக்கராக மாறி இருக்கும் நிலையில், என்டிஏ அரசுக்கு ஆதரவு தர அவர் முக்கிய நிபந்தனைகளை வைப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.