பெட்டாலிங் ஜெயாவில் பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு; பாதி மயக்க நிலையில் இரு சிறுவர்கள் மீட்பு!

பெட்டாலிங் ஜெயா | மார்ச் 14, 2026 :

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் 1 ஏமாஸ் பகுதியில் உள்ள நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை நிகழ்ந்த தீ விபத்தில், வீட்டிற்குள் சிக்கியிருந்த இரண்டு சிறுவர்கள் தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டனர்.

காலை 10:37 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்துள்ளது. 10:46 மணியளவில் தாமன்சாரா தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர் என்று, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தெரிவித்துள்ளது.

சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீட்டின் வரவேற்பு அறை 50 விழுக்காடு தீயினால் சேதமடைந்தது. காலை 10:54 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் சோதனை நடத்தியபோது, ஒரு அறையில் சுமார் 4 முதல் 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி பாதி மயக்க நிலையில் (Semi-conscious) கண்டெடுக்கப்பட்டனர்.

அவர்கள் உடனடியாக வெளியே கொண்டு வரப்பட்டு, அவசர மருத்துவ மீட்புப் படை (EMRS) வீரர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டமன்சாரா மற்றும் பெட்டாலிங் ஜெயா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 13 வீரர்கள் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது மீண்டும் தீ பரவாமல் இருக்க ‘ஓவர்ஹால்’ (Overhaul) பணிகள் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here