தாய்லாந்தில் 14,000க்கும் அதிகமான மோசடிக்காரர்கள் கைது!

பேங்காக்:

இணையம் வழி மோசடி செய்யும் நபர்களை குறிவைத்து ஏழு மாதங்களுக்கு மேலாக தாய்லாந்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் 14,000க்கும் அதிகமான மோசடிப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.

தொலைபேசி அழைப்பு மூலம் மோசடி, முதலீடு மோசடி, சட்டவிரோதமாக இணையத்தில் சூதாட்ட தளங்களை நடத்துவது போன்ற செயல்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அமலாக்க நடவடிக்கை மூலம் கிட்டத்தட்ட 575,000 ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளை காவல்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

மோசடிக்காரர்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பறிமுதல் செய்யப்பட்ட சொத்து மூலம் இழப்பீடு வழங்க தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சட்டவிரோதமாக பணபரிவர்த்தனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தமது அமைப்புடன் தாய்லாந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை எடுத்ததாகவும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தாய்லாந்து காவல்துறையின் பேச்சாளர் ஜூன் 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.

தொழில்நுட்பங்கள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களின் கட்டமைப்பையும் நிதி நிலைமையை முடக்கியது அமலாக்க நடவடிக்கையின் வெற்றி என்று காவல்துறை தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடந்த அதிகாரிகளின் அமலாக்க நடவடிக்கையில் 14,826 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த அமலாக்க நடவடிக்கைக்கு தாய்லாந்தின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பு பெரும் உதவியாக இருந்ததாக காவல்துறை தெரிவித்தது. சட்டவிரோதமாக சமிக்ஞை கட்டமைப்புகளை வைத்திருப்பவர்களை அடையாளம் காண அமைப்பு உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்குமாறும் பொதுமக்களுக்கு தாய்லாந்து காவல்துறை அறிவுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here