புத்ரஜெயா:
மலேசியாவில் ஊழல் விசாரணை தொடர்பில் சுங்கத் துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் புரிந்ததாக நம்பப்படும் அதிகாரிகளிடமிருந்து 4.4 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 பேரில் 11 பேர் சுங்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என்று நம்பப்படுகிறது.
மேலும், சுமார் 28,000 ரிங்கிட் மதிப்புள்ள நான்கு யமஹா எக்ஸ்மேக்ஸ், 200,000 ரிங்கிட்டுக்கு மேல் மதிப்புள்ள தோயோத்தா ஆல்பர்ட் கார், ஒரு பிஎம்டபிள்யு கார், நகைகள், ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், ஒரு நிலப்பகுதி ஆகியவற்றையும் ஆணையத்தின் அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர்களின் நிறுவனம் மற்றும் தனிப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அவ்வங்கிக் கணக்குகளில் ஏறக்குறைய இரண்டு மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர்களின் இதர வங்கிக் கணக்குகளையும் விசாரணையாளர்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்று விவரம் அறிந்த வட்டாரம் தெரிவித்தது.
முன்னதாக கைப்பற்றப்பட்ட 19 கொள்கலன்களையும் சோதனையிடுவதற்காக சுங்கத் துறை அதிகாரிகளுடன் ஊழல் தடுப்பு ஆணையம் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.
இதற்கிடையே தங்களுடைய துறை, பிரிவுகளில் நடைபெறும் ஊழல் பற்றி தெரிவிக்காதவர்கள் வேலை இழக்க நேரிடும் அல்லது குற்றவியல் வழக்குத் தொடுக்கப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் மேற்கொள்ளும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து மௌனம் காத்தால் பொறுப்பில் உள்ளவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும். இதுவும் தண்டனைகளில் அடங்கும் என்றார் அவர்.






















