சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: மஇகாவின் மாறுபட்ட நிலைப்பாடு

சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் கூறினார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தோடு ஒப்பிடுகையில் சுங்கை பாக்காப் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா நேரடியாக சம்பந்தப்படாது என்று அவர் சொன்னார்.

சுங்கை பாக்காப்பில் மஇகா பிரச்சார நிலைப்பாடு சற்று மாறுபட்டே இருக்கும். இத்தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வெற்றிக்கு தன்னால் இயன்றதை மஇகா செய்யும்.

பினாங்கு மாநில அரசாங்கம் பக்கத்தான் ஹராப்பான் கோட்டையாகத் திகழ்கிறது.  இங்கு ஜசெக பல இந்திய தலைவர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் கொண்டிருக்கிறது.  இவர்கள் அனைவரும் இந்திய வாக்காளர்களிடமிருந்து பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவை திரட்டித் தர முடியும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

மஇகாவின் இந்த மாறுபட்ட நிலைப்பாடானது இந்த இடைத்தேர்தலில் தனக்குள்ள பொறுப்பை கட்சி விட்டுக்கொடுக்கிறது என்று அர்த்தமாகிவிடாது.  அதேசமயம் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு உதவுவதில் மஇகா மறுக்கிறது என்றும் அர்த்தமாகிவிடாது.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மஇகா பங்கேற்காது என்று முதலில் அறிவித்தோம்.  ஆனால், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்சியில் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் அங்கு மஇகா தேர்தல் கேந்திரம் திறக்கப்பட்டது. மஇகா அதன் சொந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கை அறைகளையும் கொண்டிருந்தது.

பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சொக் தாவ் வெற்றிக்கு மஇகா முழு வீச்சில் களமிறங்கி பிரச்சாரம் செய்தது.  ஆனால், சுங்கை பாக்காப்பில் நிலைமை மாறுபட்டிருக்கிறது. மஇகா இங்கு அதன் சொந்த நடவடிக்கைகளை அறைகளைக் கொண்டிருக்காது.

ஆனால், பாரிசான் நேஷனல் தேர்தல் நடவடிக்கை அறைகளைப் பயன்படுத்தி கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தொடர்ந்து கூறினார்.

சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதியில் நேரடிப் போட்டி நிலவுகிறது.  பக்காத்தான் ஹராப்பான் ஒரு கல்வியாளரான ஜுஹாரி அரிஃபினை களமிறக்கியிருக்கிறது. அதேசமயத்தில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் அபிடின் இஸ்மாயில் போட்டியிடுகிறார்.

சேகு ஜுஹாரி பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர். அதேசமயத்தில் அபிடின் பாஸ் கட்சியைப் பிரதிநிதிக்கிறார். இத்தொகுதியில் 39,279 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுள் 59 விழுக்காட்டிர் மலாய் வாக்காளர்கள். சீனர்கள் 22.5 விழுக்காடு இந்தியர்கள் 17.4 விழுக்காடு,  மற்றவர்கள் ஒரு விழுக்காடு என்ற நிலையில் பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here