லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராமர் கோயிலில் வடிகால் அமைப்பு இல்லையென்றும், மேற்கூரை மழைக்கு ஒழுகுகிறது என்றும் கோயிலின் தலைமை பூசாரி குற்றம்சாட்டியுள்ளார். லோக்சபா தேர்தலின்போது ராமர் கோயில் பரபரப்பாக பேசப்பட்டது. ராமருக்கு கோயில் கட்டுவது என்பது பல நூறு ஆண்டுக்கால கனவு என்றும், இந்த கனவு பாஜக ஆட்சியில் நிறைவேறியுள்ளது என்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஊர் ஊராக பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். குடிசையில் இருந்த ராமரை கோபுரத்திற்கு கொண்டு வந்தது பாஜகதான் என்றும், ராமர் கோயிலை கட்டியதன் மூலம் பொற்காலம் தொடங்கிவிட்டதாக குழந்தை ராமரே கூறுவது போல் உணர்ந்தேன் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இப்படியாக லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்டது. கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என்றாலும் கூட, கோயில் திறந்து வைக்கப்பட்டது அரசியல் ஆதாயத்திற்காகதான் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் கனமழை பெய்திருக்கிறது. இந்த மழை காரணமாக கோயிலுக்குள் தண்ணீர் தேங்கியிருக்கிறது. மழை நீர் வடிய வடிகால் அமைப்பை கூட செய்யவில்லை என்றும், கருவறையிலேயே மழை நீர் ஒழுகுகிறது என்றும் கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோயில் கட்டுவதில் அலட்சியம் காட்டப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், மழைநீர் தேங்காதவாறு உடனடியாக நடடிவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டையடுத்து கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கோயிலுக்கு வந்து, மழைநீர் கசியும் பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் கசிவை சரி செய்யும்படி கட்டுமான குழுவுக்கு வலியுறுத்தினார்.



















