இரு மாதங்களில் ரூ.167 கோடி தங்கம் கடத்தல்: 9 பேர் கைது

சென்னை:

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், பல்வேறு நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.167 கோடி மதிப்பிலான தங்கம், சென்னை விமான நிலையத்தில் பிடிபடவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர், ஊழியர்கள் உள்பட 9 பேர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் உள்ள அனைத்துலகப் புறப்பாடு முனையத்தில் சில கடைகள் இயங்கி வருகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து கடத்திவரப்படும் தங்கம், இக்கடைகளில் மறைத்து வைக்கப்படுவதாகவும் பின்னர் விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், விமான நிலையக் கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். விமான நிலையத்தில் கடை வைத்துள்ள சபீர் அலி என்பவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.

அதில், துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சில பயணிகள் கடத்திவரும் தங்கம், சபீர் அலியின் கடைக்கு அருகே உள்ள கழிவறையில் வைக்கப்படுவதும் அதுகுறித்த தகவலின்பேரில் சபீர் அலி அக்கடத்தல் தங்கத்தை பிறகு எடுத்துக்கொள்வதும் வாடிக்கையாக இருந்தது தெரிய வந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இவ்வாறு தங்கம் கடத்தி வருபவர்கள், சென்னையில் இருந்து மற்றொரு விமானத்தில் ஏறிச் சென்றுவிடுவதும் வழக்கமாக இருந்துள்ளது.

கடத்தல் தங்கத்தை விமான நிலையக் கழிவறையில் இருந்து எடுக்கவும் பின்னர் வெளியே எடுத்துச்செல்லவும் எட்டு பேருக்கு பயிற்சி அளித்து வேலைக்கு வைத்துள்ளார் சபீர் அலி.

இந்த ஊழியர்கள் கடத்தல் தங்கத்தை உடலுக்குள் மறைத்து வைத்து, விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்று உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.167 கோடி ரூபாய் மதிப்பிலான 867 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடத்தலின் மூலம் கடை உரிமையாளர் ரூ.2.5 கோடி ரூபாயும் ஊழியர்கள் ரூ.10 லட்சம் வரையும் சம்பாதித்து உள்ளனர்.

இதையடுத்து, சபீர் அலியும் அவரது எட்டு ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here