ஜோகூர் பாரு:
ஜோகூர், தாமான் புக்கிட் இண்டா (Taman Bukit Indah) பகுதியில் ஐபேட் பயன்படுத்துவது தொடர்பாகத் தனது பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காணாமல் போன 12 வயது சிறுவன், இன்று (டிசம்பர் 24) மாலை பாதுகாப்பாக வீடு திரும்பினான்.
தாங் ஹாங் ஜுன் (Tang Hong Jun) என்ற அந்தச் சிறுவன், iPad-டைப் பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்காததால் அதிருப்தி அடைந்து, நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காலை தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். இது குறித்து அவனது 47 வயது தந்தை போலீசில் புகார் அளித்திருந்தார்.
“சிறுவன் காணாமல் போனது குறித்த புகார் நேற்று காலை 10.46 மணியளவில் பெறப்பட்டது. விசாரணையில், அச்சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலேயே இருந்த ஒரு பாழடைந்த வீட்டில் மறைந்திருந்தது தெரியவந்தது. தற்போது அந்தச் சிறுவன் தானாகவே பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளான்,” என்று, இஸ்கந்தர் புத்திரி மாவட்டப் போலீஸ் தலைவர் (OCPD) உதவி ஆணையர் எம். குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவன் நலமுடன் திரும்பியது அனைவரையும் நிம்மதியடையச் செய்துள்ளது.




















