கோலாலம்பூர்:
மலேசியாவில் இந்த ஆண்டின் முதல் பாதியில், 60 வயதுக்கும் மேற்பட்ட 3,229 மூத்த குடிமக்கள் இன்னும் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
உலு திரெங்கானு AADK அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் (AADK) தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ இத்தகவலைத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் இந்தாண்டு ஜூன் மாதம் வரை கண்டறியப்பட்ட மொத்தம் 130,000 போதைப்பொருள் பயன்பாட்டாளர்களில் மூத்த குடிமக்கள் 2.5 சதவீதம் பேர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் 4,311 முதியவர்கள் போதைப்பித்தர்களாக இருப்பது கண்டறியப்பட்டது. எனவே கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை இந்தாண்டு சற்று குறைந்துள்ளது.
ஜூன் மாதம் பெசூட் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது பிடிபட்ட 63 வயது முதியவரே இதுவரை கண்டறியப்பட்ட மிக வயதான போதைப்பொருள் பயன்பாட்டாளர் ஆவார். சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு, பெரியவர்களுக்கான டயப்பர் அணிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அம்மாற்றுத்திறனாளி முதியவர், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானதாகவும், ‘பில் குடா’ (Pil Kuda) எனும் போதை மாத்திரைப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
நாட்டிலேயே 31 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களே அதிகபட்சமாகப் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த வயதினர் மொத்தம் 92,590 நபர்கள் அதாவது 71.1% ஆவர்.
ஷாபு (Syabu), பில் குடா (Pil Kuda) மற்றும் எக்ஸ்டசி (Ecstasy) போன்ற செயற்கைப் போதைப்பொருட்களின் பயன்பாடு 73 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது மிகுந்த கவலையளிப்பதாக ருஸ்லின் ஜூசோ சுட்டிக்காட்டியுள்ளார்.
























