காந்தி நகர்: குஜராத்தில் உள்ள பள்ளியின் முதல் தளத்தில் அமைந்துள்ள வகுப்பறையில் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென்று சுற்றுச்சுவர் இடிந்ததில் சில மாணவர்கள் தலைகீழாக விழுந்த பதறவைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் வகோடியா சாலையில் ஸ்ரீ நாராயண் குருகுல பள்ளி செயல்பட்டு வருகிறது. இது தனியார் பள்ளியாகும். இந்த பள்ளி நேற்று வழக்கம்போல் செயல்பட்டது.
நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது வகுப்பறையில் மாணவர்கள் உணவு சாப்பிட்டனர். அதன்பிறகு மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது முதல் தளத்தில் உள்ள வகுப்பறையின் சுற்றுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் அந்த வகுப்பறையின் ஒருபகுதி அப்படியே கீழ்நோக்கி விழுந்தது. இதில் சில மாணவர்கள் தலைகீழாக கீழே விழுந்தனர். வகுப்பறையில் இருந்த டெஸ்க்குகளும் கீழே விழுந்தன.
இதுபற்றி தீயணைப்பு துறை அதிகாரி வினோத் மோகித் கூறுகையில், ‛‛பள்ளி கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளதாக எங்களுக்கு போன் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டோம். 7 ம் வகுப்பு படிக்கும் மாணவர் காயமடைந்துள்ளார். கட்டடம் இடிந்து சைக்கிள் நிறுத்தும் இடத்தின் மீது விழுந்தது. இதனால் அங்கு நிறுத்தப்ட்டு இருந்த 10 – 12 சைக்கிள்கள் சேதமடைந்துள்ளது” என்றார்.























