கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று புரூணை சுல்தான் ஹசனல் போல்கியாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் மலேசியா மற்றும் புரூணைக்கு இடையேயான ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து விவாதித்ததாக ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் அடுத்த மாதம் பண்டார் ஸ்ரீ பெகவானில் நடைபெறும் 25 வது ஆண்டு தலைவர்களின் ஆலோசனை மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இந்த சந்திப்பு நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதாக அன்வார் அந்தப்பதிவில் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்றுக் காலை இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மலேசியாவின் 17வது மன்னராக சுல்தான் இப்ராஹிமின் அதிகாரபூர்வ சடங்கில் சுல்தான் ஹசனல் போல்கியா மற்றும் அவரது மனைவி ராஜா இஸ்டெரி பெங்கிரான் அனக் ஹாஜா சலேஹா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

























