புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 10 விழுக்காட்டினர் வெளிநாட்டவர் தொடர்பானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு பகிர்ந்துள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை தகவல் குறிப்பிட்டது.
இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் 10 பேரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவராக உள்ளனர். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 18,378 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 42 பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதன்படி இந்தியாவில் மொத்தம் 18,336 உடல் உறுப்புகளை பெற்றவர்களில் 1,851 பேர் (10%) வெளி நாட்டவர்களாக உள்ளனர்.அதிகபட்சமாக டெல்லியில் வெளிநாட்டைச் சேர்ந்த 1,445 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் (116), மேற்கு வங்காளம் (88), உத்தரப் பிரதேசம் (76), தெலுங்கானா (61), மகாராஷ்டிரா (35), கர்நாடகா (15), குஜராத் (11), தமிழ்நாடு (3), மணிப்பூர் (1) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இது குறித்து பேசிய மருத்துவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளில் பெரும்பாலானோர் அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக, பங்ளாதேஷ், நேபாளம், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், உயிருள்ள நன்கொடையாளரிடம் இருந்து உறுப்புகளை மாற்றிக் கொள்வதற்காக இந்தியா வருகின்றனர். மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வசதி மற்றும் அதற்கான சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கு இல்லாததன் காரணமாகவே அவர்கள் இந்தியா வருகின்றனர் என்றார்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷ் குப்தா கூறுகையில், எங்கள் மருத்துவ நிலையத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வருபவர்களில் 30 விழுக்காட்டினர் வெளிநாட்டவர் என்று குறிப்பிட்டார்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்தும் உறுப்புகளை மாற்றிக் கொள்வதற்காக இங்கு வருகின்றனர். அவர்களுடைய நாடுகளுடன் ஒப்பிடும்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு இந்தியாவில் பத்தில் ஒரு பங்காகவே உள்ளது. வெளிநாட்டிலிருந்து அதிகளவில் நோயாளிகள் சிகிச்சைக்காக இந்தியாவை நோக்கி வருவதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.