ராமநாதபுரம்:
அமைச்சராக இருக்கும் உதயநிதி ஆகஸ்ட் 19ஆம் தேதி துணை முதல்வர் ஆகிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் மறைமுகமாகக் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதியை துணை முதல்வராக்க திமுக அமைச்சர்கள் பலரும் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடாக அவ்வப்போது தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இது பற்றி முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘‘உதயநிதியை துணை முதல்வராக்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை,” எனப் பதிலளித்தார்.
இந்த நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த ‘தமிழ்ப்புதல்வன்’ திட்ட துவக்க விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், ‘துணை முதல்வர் உதயநிதி’ எனக் கூறிவிட்டு, அடுத்த நொடியே, “சாரி, ஆகஸ்ட் 19ம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதி துணை முதல்வராவார். அதற்கு முன்னால் அப்படிச் சொல்லக்கூடாது,” எனக் கூறி சமாளித்தார்.
அவர் இவ்வாறு கூறுவதைக் காட்டும் காணொளி காட்டுத் தீ போல பரவி வருகிறது.
ஆகஸ்ட் 19ஆம் தேதி உதயநிதி துணை முதல்வராகிறார் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதையடுத்து, அவருக்கு அந்தப் பதவி கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
அன்றைய தினம் பவுர்ணமி என்பதால் நல்ல நாளாகப் பார்த்து உதயநிதி பதவியேற்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், “உதயநிதி துணை முதல்வராக ஆவதில் தவறில்லை,” என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே சுபமுகூர்த்த தினமான டிசம்பர் 14, 2022ல் புதன்கிழமையாகப் பார்த்து, நல்ல நேரத்தில் (காலை 9:28) உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி
கருணாநிதி நாணயம்
கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மதிப்பிலான நாணயத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய தற்காப்புத்த் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த நாணயத்தை வெளியிடுகிறார்.
இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து கடந்த ஜூன் 4ஆம் தேதி நாணயத்தின் மாதிரி வெளியிடப்பட்டது.









