தாவாவ்:
கடந்த மார்ச் மாதம் லஹாட் டத்து தொழிற்கல்லூரியில் 17 வயது மாணவனைக் கொலை செய்ததாக 13 வாலிபர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்டபோது, குற்றச்சாட்டுகளை தாங்கள் புரிந்து கொண்டதாகவும், நீதிபதி டத்தோ டங்கன் சிகோடோல் முன்நிலையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி, விசாரணை கோரினர்.
அதனைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 18 முதல் 20 வரை மற்றும் நவம்பர் 25 முதல் 29 வரை மொத்தம் 10 நாட்களை விசாரணைக்காக நீதிமன்றம் நிர்ணயித்தது.
வழக்கு விசாரணை முழுவதும் சாட்சியமளிக்க மொத்தம் 10 முதல் 12 சாட்சிகளை அரசு தரப்பு அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தாவாவ் சிறைச்சாலையில் இன்று முதல் விசாரணை தேதி வரை தடுப்பில் வைக்கப்படுவார்கள்.
16 முதல் 19 வயதுக்குட்பட்ட அவர்கள், கடந்த மார்ச் 21 அன்று இரவு 9 மணி முதல் மார்ச் 22 காலை 7.35 மணி வரை தங்குமிட அறைகள் 7 ரெசாக் மற்றும் 5 பெலியன், லஹாட் டத்து தொழிற்கல்லூரியில் முகமட் நஸ்மி அய்சாத் முகமட் நருல் அஸ்வானைக் கூட்டாகச் சேர்ந்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் படி, அதே சட்டத்தின் பிரிவு 24 உடன் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.