பகாங் அரச குடும்பத்தினர் தந்த தகவலின் அடிப்படையில் களமிறங்கிய புக்கிட் அமான் போலீஸ் இ- வேஸ்ட் எனும் மின்னியல் கழிவுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, பதப்படுத்தி ஏற்றுமதி செய்த ஒரு பெரிய கும்பல் ஒன்றை வளைத்துப் பிடித்து கைது செய்தது.

கிட்டத்தட்ட 43 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இந்த சட்டவிரோத மின்னியல் கழிவு தொழில் தொடர்பில் 30 முதல் 50 வயதிற்குட்பட்ட 55 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமான் அம்லா எனப்படும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு பிரிவு, ஐஜிபி செயலகப் பிரிவு கூட்டாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தன.
சிலாங்கூரில் உள்ள ரவாங், புக்கிட் தாகார், நெகிரி செம்பிலானில் உள்ள கெமெஞ்சே, ரெம்பாவ், பகாங்கில் உள்ள பெக்கான், பாண்டார் முவாட்ஸாம் ஷா, ஜோகூரில் உள்ள சிம்பாங் ரெங்கம் ஆகிய பகுதிகளில் போலீஸ் ஆகஸ்டு 5 ஆம் தேதி முற்றுகையிட்டது.

பகாங் ரீஜண்ட் தெங்கு ஹஸனால் இப்ராஹிம் அலாம் ஷா அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா நேரடியாக தந்த தகவலின் அடிப்படையில் இந்த சட்டவிரோத தொழிற்சாலைகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது அம்லா பிரிவு தலைவர் டத்தோ முஹம்மட் ஹஸ்புல்லா அலி கூறினார்.









